எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் : சபாநாயகர் அப்பாவு

By 
abbavu

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : 

'சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரையும், துணைச் செயலாளராக அக்ரி.எஸ். கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க வேண்டும் என சட்டமன்ற அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி ஒரு கடிதத்தை எனது அலுவலகத்தில், வழங்கியுள்ளார். 

ஏற்கனவே, கடந்த வாரம் இது சம்பந்தமாக ஓ.பன்னீர்செல்வமும் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். 

இந்நிலையில், தற்போது வேலுமணி கொடுத்த கடிதத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. 

நான் சட்டமன்ற அலுவலகத்தில் உள்ள அந்த கடிதத்தை பார்த்த பிறகு, சட்ட விதிகளின்படியும், சட்டமன்ற விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். 

மற்றபடி, என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 66 பேருமே இரட்டை இலை சின்னத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள். அந்த கட்சியில் யார் தலைவர்? யார் செயலாளர்? என்பதை அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள். இதில் சட்டமன்ற தலைவர் தலையிடமாட்டார். 

எதற்காக எதிர்க்கட்சி துணைத்தலைவரை நீக்கினார்கள்? எதற்காக புதிய ஆட்களை நியமிக்கிறார்கள் என்பதை படித்துப் பார்க்க வேண்டும். 

ஏற்கனவே இதுதொடர்பாக நீதிமன்றம், தேர்தல் கமிஷன் உள்ளிட்டவைகளில் முறையிட்டுள்ளார்கள். 

எனவே, ஜனநாயக முறையில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
*

Share this story