வந்தேறி கும்பலை வாள்முனையில் வேரறுத்த வாளுக்கு வேலியை போற்றுவோம் : மருது அழகுராஜ்

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட, சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது பாகனேரி.
பாகனேரி நாடு என்பது 22 1/2 சிற்றூர்கள் உட்பட்டுள்ள ஒரு பகுதியாகும். இந்த நாட்டின் தலைவர் வாளுக்குவேலி அம்பலம் ஆவார். இவருடைய மனைவி கல்யாணி மற்றும் இவருடைய தம்பி கருத்தப்பன் அம்பலம் ஆவர்.
மருது பாண்டியர்களின் உற்ற நண்பராக விளங்கிய வாளுக்கு வேலி அம்பலத்தின் போர்ப்படைகள் வெள்ளையர்களுக்கு எதிரான போரில் மருது பாண்டியர்களுக்கு பெரிதும் உதவின.
வேலு நாச்சியார் மற்றும் மருது சகோதரர்களுடன் சேர்ந்து, இவர் போரில் ஈடுபட்டதை, சிவகங்கை சரித்திர அம்மானையில் பக்கம் 151-ல் குறிப்பிடப்படுகிறது.
அக்டோபர் 24 ,1801-ல் கத்தப்பட்டு என்ற ஊரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அந்த இடத்தில் இவரின் நினைவாக, இவரது சகோதரர் கருத்தப்பன் அம்பலத்தால் நடுகல் வைத்து வணங்கி வருகின்றனர்.
அதில், வாளுக்குவேலி அம்பலம் சிலையின் கையில் ஈட்டி மற்றும் வளரி வைத்துள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது.
நாளை அக்டோபர் 24-ந்தேதி திங்கள் கிழமை மாவீரர் வாளுக்கு வேலியின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரது நினைவாகவும் வீரத்தைப் போற்றும் விதமாகவும் கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள கவிதை வாள் காண்க :
* உச்சரிக்கும்
போதே
உதிரத்தில்
வீரத்தை
கொப்பளிக்கும்
திருப்பெயர்
"வாளுக்கு
வேலி"...
* கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில்
பாகனேரி
நாடாண்ட
படைத்
தலைவன்..
சூடிய பெயருக்கு
ஏற்ற
சுத்தவீரன்..
* வந்தேறி
கும்பலை
வாள் முனையில்
வேரறுக்க
ஆள் அம்பு
சேனை
திரட்டிய
அம்பலக்காரர்...
மாமன்னர்
மருதிருவரது
உற்ற தோழன்..
அவர்களுக்கே
உயிர்
கொடுத்த
உத்தம வீரன்...
* சொந்த
மண்ணையும்
மக்களையும்
அந்நியருக்கு
விற்பனை
செய்திட
நாங்கள்
ஒன்றும்
வியாபாரிகள்
அல்ல..
பிழைத்துப்
போ என்று
ஆங்கிலேய
தளபதி
அக்னியுவை
கதறவிட்ட
வைர
நெஞ்சம்
வரிப்புலியின்
வம்சம்..
* சிறை
பிடிக்கப்பட்ட
மாமன்னர்கள்
மருதிருவரை
திருப்பத்தூரில்
தூக்கிலிட
பரங்கியர்
கம்பெனி
பதற்றத்தோடு
ஏற்பாடுகள்
செய்ய..
என்ன விலை
கொடுத்தேனும்
எங்கள்
மன்னவர்
மருதிருவரை
மீட்டாக
வேண்டும்
என
பாகனேரி
பட்டமங்கலம்
நாட்டு
படைகளோடு
வழியெங்கும்
வீரர்களை
திரட்டிய
வண்ணம்,
வைரமுத்தன்
நாகப்பன்
மேகநாதன்
உள்ளிட்ட
படைத்
தளபதிகள்
சகிதமாக..
புயலாக
பறந்து வந்த
வாளுக்கு வேலியை
புல்லுருவி
உறங்காப்புலி
வெட்டி வைத்த
புதைகுழி
இரையாக்கி
கொண்டது...
* ஆம்.,..
வைரமுத்தனை
கொல்ல
இலை சருகு
இவை
கொண்டு
மூடி
மண்பத்தை
அமைத்து
உறங்காப்புலி
வெட்டி வைத்த
சதிக்குழு
ஒப்பில்லா
வீரர்களின்
உயிர் பறித்து
முடித்தது...
கத்தப்பட்டு
என்னும்
அவ்விடத்தில்
மண்
பெருமையும்
மன்னர்கள்
மருது
இருவரையும்
காத்திடவே
போராடிய...
மாவீரன்
வாளுக்கு வேலி
மண்ணுக்கே
தன்னை தந்து
மறைந்தார்..
* ஆம்...
வாள்போல்
பகைவரை
அஞ்சற்க
அஞ்சுக
கேள்போல்
பகைவர்
தொடர்பு...
அதாவது
வாள் போல்
வெளிப்படையாக
துன்பம்
செய்யும்
பகைவர்க்கு
அஞ்ச
வேண்டியது
இல்லை..
ஆனால்...
உறவு போல
மறைந்து
இருக்கும்
பகையும்
நட்புமே
பேரழிவை
தந்துவிடும்..
என்னும்
வள்ளுவன்
குறளுக்கு
எங்கள்
வாளுக்கு வேலி
வரலாற்று
சாட்சியானான்..
விடுதலை
வரலாறு
வணங்குகிற
காட்சியானான்.
இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் இயற்றியுள்ளார்.
*