எம்.ஜி.ஆர் விதியும், எடப்பாடி சதியும் : மருது அழகுராஜ் தெளிவுரை 

marudhu76

'இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தாமாக முன்வந்து எடப்பாடி ராஜினாமா செய்து விட்ட நிலையில், இப்போது கழகத்தை வழி நடத்துபவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மட்டுமே' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் உறுதிபட கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் விளக்கியுள்ள அறிக்கை வருமாறு :

 கழக நிறுவனர் புரட்சித்தலைவர் வகுத்துத் தந்திருக்கும் மாற்றக்கூடாத கட்சியின் சட்டவிதிகளின்படி, தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ஆயுட் காலம் ஐந்து வருடங்கள்.
அதாவது, 2026 டிசம்பர் வரை.. என்றிருக்க..

தேர்வு செய்யப்பட்ட  அந்த தலைமையை நீக்குகிற அதிகாரம் எவனுக்கும் இல்லை, எடப்பாடிக்கும் இல்லை.
எடப்பாடியின் பணத்துக்கு மாரடிக்கும் கும்பலுக்கும் இல்லை.

மேலும், இடைக்காலம் வடைக்காலம் என்னும் பதவிகளுக்கு கட்சியின் சட்ட திட்ட விதிகளில் இடமும் இல்லை.

தொண்டர்கள் தேர்ந்து எடுத்த தலைமையை நீக்கும் அதிகாரம், அதே தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு.

அதுவும், ஐந்தாண்டு ஆயுட்காலம் நிறைவுறும் காலத்தில் அடுத்து நடக்கும் கட்சிக்கான தேர்தலில் மட்டுமே தொண்டர்கள் விரும்பினால், தலைமை மாற்றத்தை அவர்கள் கொண்டு வரமுடியும்.

இதை தவிர, தரைப்பாடியின் கூலிக்கு கூவுகிற டெண்டர்களால்; தொண்டர்கள் தேர்வு செய்ததை தங்கள் விருப்பத்துக்கு மாற்ற முடியாது. இது தான், மனித சக்தி கடந்த மகா சக்தியான மக்கள் திலகம் எம் ஜி ஆரின் சாஸ்வத சட்டம்.

இவ்வாறு இருக்க.. தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தாமாக முன்வந்து எடப்பாடி ராஜினாமா செய்து விட்ட நிலையில், இப்போது கழகத்தை வழி நடத்துபவர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மட்டுமே.

அவர் கையொப்பம் இட்டால் மட்டுமே சின்னம்.. அவர் நியமிக்கும் பதவிகள் மட்டுமே செல்லும்..
இதனையே, உச்சநீதி மன்றம் உறுதிபட சொல்லும்.

எனவே, கூவத்தூர் பழனி குத்துக்கோல் சின்னம் வாங்கிக்கொண்டு தனிக்கட்சி நடத்தலாம். துணைக்கு வேண்டுமானால், மேதாவி மெயின்ரோடு ஜெயக்குமாரையும்... சட்ட மேதை சம்முவத்தையும்  வைத்துக் கொள்ளலாம்.

ஆக, எடப்பாடி இல்லாத அ.தி.மு.க. ஒப்பில்லா தலைவி அடையாளம் காட்டிய, தப்பில்லா தங்கமகன் ஓ.பி.எஸ் தலைமையில் தொண்டர்கள் தேர்வாக.. துடிப்போடு நடைபோடும்; எதிர்வரும் தேர்தல்களில் மிடுக்கோடு வாகை சூடும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story