மனு ஸ்மிருதி நூல் சர்ச்சை : திருமாவளவனுக்கு, மருது அழகுராஜ் விளக்கம்

marudhu25

சபலப் புத்தி படைத்தவர்கள் என பெண்களை அடக்கி வைக்கும் மனுஸ்மிருதி நூலை 1 லட்சம் பிரதிகள் அச்சடித்து விநியோகம் செய்ய இருக்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவித்துள்ளார்.

இந்துத்துவ கோட்பாடுகளை வலியுறுத்தும் மனுஸ்மிருதி நூலில் ஆண்-பெண் வேறுபாடு; சக மனிதர்களிடையே வேறுபாடு என வர்ண, பாலின பேதக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன; ஆகையால் மனுஸ்மிருதிக்கு எதிராக 100 ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் போராடி வருகிறது. அம்பேத்கரும் மனுஸ்மிருதியை எரித்துப் போராட்டம் நடத்தினார்.

சென்னையில், அண்மையில் திமுகவை பொறுத்தவரை ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ளவை குறித்து பேசியது பிரளயமானது. 

ஆ.ராசா தமது பேச்சில், "நீ பார்சியாக இல்லையெனில், கிறிஸ்தவனாக இல்லையெனில், இஸ்லாமியராக இல்லையெனில், நீ ஒரு இந்துவாகத்தான் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? 

இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; 

இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்;இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? 

எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்கின்ற கேள்வியை உரக்கச் சொன்னால் தான், அது சநாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது" என கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

மனு ஸ்மிருதிக்கு மறுஜென்பம் தரப்போகுதாம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு.,

ஆம். ஒரு லட்சம்  மனு ஸ்ம்ருதி புத்தகங்களை அச்சடித்து கொடுக்கப் போறாராம் திருமா.

ஏனாம்.. தமிழகத்தில் வாழும்  இந்துக்கள் யாரும், மனு ஸ்ம்ருதியை கண்ணால பார்த்ததும் இல்லை.
கையேடாக அதனை வச்சிக்கிட்டு வாழுறதும் இல்லை.

அப்படியிருக்க, புழக்கத்தில் இல்லாது புதைந்துபோன பழமைவாத நூலை அச்சிட்டு கொடுக்கிற அகழ்வாராய்ச்சி அரசியலுக்கான அவசியம் ஏன் வந்தது என்பது புரியவில்லை.

அடுத்ததாக, பலநூறு ஆண்டுகளுக்கு முன் பின்பற்றப்பட்ட சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறித்தும் ஒரு புத்தகத்தை  அச்சடித்து கொடுங்க..

போற போக்கை பார்த்தா...

பா.ஜ.க.வை வளர்த்தெடுக்கும் முயற்சியில், அண்ணாமலையை விட, திருமா தான் வெகு வேகமா இருக்காருன்னு தோனுது.

- இவ்வாறு கவிஞர் அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story