பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : பிரேமலதா ஆவேசம்

By 
prema

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கோவை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கணபதி பகுதியில் 5 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்களான கரும்பு, வெல்லம், பச்சரிசி,முந்திரி பருப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் அங்கு பொங்கல் பானையில் அரிசி போட்டு பொங்கல் வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

சாதி, மதம், இனம் மொழிக்கு அப்பாற்பட்டது தே.மு.தி.க நாங்கள் பொங்கலும் கொண்டாடுவோம், ரம்ஜானும் கொண்டாடுவோம் கிறிஸ்துமஸ்சும் கொண்டாடுவோம். சின்ன கவுண்டர் படம், வானத்தைப்போல படம் போன்றவற்றில் கொங்கு மண்டலத்தை காட்டியது விஜயகாந்த். மக்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவேன் என்றவர் விஜயகாந்த். ரேஷன் பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னவர் விஜயகாந்த். யாரும் மறந்து விடாதீர்கள்.

தே.மு.தி.க நேர்மையான கட்சி. நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தே.மு.தி.க செல்லாது. எங்கள் தொண்டர்கள் எங்கும் வசூல் செய்தது இல்லை. எங்கள் தொண்டர்களின் வியர்வையில் சம்பாதித்த காசில்தான் நாங்கள் உதவி செய்கிறோம்.

அ.தி.மு.க.வை வெட்கக்கேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் விழா அ.தி.மு.க. கொண்டாடவில்லை. தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க பொதுக்கூட்டத்தில் பெண் போலீசாருக்கு தி.மு.க நிர்வாகிகள் வன்கொடுமை செய்துள்ளனர். பெண் போலீசாரை துன்புறுத்திய தி.மு.க நிர்வாகியை வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும்.

சர்க்கரையை கொண்டு பொங்கல் நடத்தும் ஆட்சி தி.மு.க ஆட்சி. சர்க்கரை பொங்கல் என்றால் சர்க்கரை போடுகிறீர்களா. வெல்லத்தை கொண்டு செய்வது தான் பொங்கல் கலாசாரம். விவசாயிகள் வயிறு எரிகின்றனர். கரும்பு விளைவிப்பவர்களுக்கு தான் கஷ்டம் தெரியும். பொங்கல் தொகுப்பில் 2500 ரூபாய் மக்களுக்கு கொடுத்து இருக்க வேண்டும். ஆயிரம் ரூபாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர்.

தமிழக அரசியல் வரலாற்றில் கவர்னர் முதன்முறையாக வெளிநடப்பு செய்த நிகழ்வு தலைகுனிவு நாளாக கருப்பு தினமாக பதியப்பட்டிருக்கிறது. கவர்னர் சாதித்துக் காட்டியிருக்க வேண்டும். கவர்னருக்கு தே.மு.தி.க கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. அன்று சட்டசபையில் நடைபெற்றது முழுவதும் நாடகம். இவ்வாறு அவர் பேசினார். அதன் பின்னர் அவர் பொது மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

Share this story