ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரில், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்?

By 
opseps7

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை களம் இறக்கும் எடப்பாடி பழனிசாமி இரட்டை சிலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், 2 நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளனர். இதனால் சுப்ரீம் கோர்ட்டு இருவரில் யாருக்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்போகிறது என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் 2 அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சூழலில்தான் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருக்கிறார். இது தொடர்பாக வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) முறையிடுங்கள், நாங்கள் முடிவெடுக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை வாதிட்ட அத்தனை அம்சங்களையும் திரட்டி திங்கட்கிழமை முறையிட எடப்பாடி பழனிசாமி அணியினர் தயாராகி வருகிறார்கள்.

மூத்த வக்கீல் அரிமா சுந்தரம், வக்கீல் பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தங்களுக்கு சாதகமாக உள்ள விஷயங்களை அலசி ஆராய்ச்சி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்களும் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

திங்கட்கிழமை வழக்கு விசாரணை நடைபெறும்போது கடுமையான ஆட்சேபங்களை தெரிவிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமே நீடிப்பதால் தங்கள் தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அவர்களும் உரிமை கோர உள்ளனர்.

இதனால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோர உள்ளதால் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுதாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந்தேதி கடைசி நாளாகும். அதற்குள் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு விடுமா? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க கோரி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கத்தை கேட்க வேண்டும். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவையெல்லாம் 7-ந்தேதிக்குள் முடிந்து விடுமா? என்பதும் சந்தேகமே.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ள வழக்கு விசாரணை அரசியல் களத்தில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share this story