அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமை விவகாரம் : எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரது ஆன்ம விருப்பம் எது? : மருது அழகுராஜ் விளக்கம்

marudhu8

அதிமுகவில், ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். ஆகிய இருவரும் சட்ட ரீதியான அணுகுமுறைகளை கையாண்டு வரும் நிலையில், தங்களது செல்வாக்கை மேலும் நிலை நிறுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

அ.தி.மு.க. தொண்டர்கள் தன்பக்கம் இருப்பதாக ஓ.பி.எஸ். கூறி வரும் நிலையில், புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ளார். தொண்டர்களும் தன்பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க பிரமாண்டமான அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவிக்கையில்,

'எடப்பாடியின் அரசியல் அபகரிப்பை முறியடிக்க வேண்டும் என்றே மக்கள் திலகத்தின் ஆன்மா மனதார வேண்டும். அது போலவே, தன்னால் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, கட்சியின் பொருளாளராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்.ஸின் பக்கமே தனது தொண்டர்கள் திரண்டெழுந்து ஆதரிக்க வேண்டும் என்பதையே அம்மாவின் ஆன்மாவும் உளமார விரும்பும்' என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

எண்ணியது செய்திடல் வேண்டும்; எதிலும் புண்ணியமே நிறைந்திட வேண்டும்; நீதிக்கு தலை வணங்கி நடக்க வேண்டும்; நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்றெல்லாம்..

தான் போதித்து வளர்த்த இயக்கத்தினுள் குடியேறிய எடப்பாடி என்னும் விஷப்பாம்பு,  

மாற்றக் கூடாதது என  தான் வகுத்து உருவாக்கிய அடிப்படை விதிகளை எல்லாம், தன் விருப்புக்கு ஏற்ப மாற்றுவதை புரட்சித் தலைவரின் ஆன்மா ஒரு போதும் ஏற்காது என்பதோடு..

மேலும், தனது தொண்டர்கள் எடப்பாடியின் அரசியல் அபகரிப்பை முறியடிக்க வேண்டும் என்றே மக்கள் திலகத்தின் ஆன்மா மனதார வேண்டும்..

அது போலவே, தன்னால் முதலமைச்சராக எதிர்க் கட்சித் தலைவராக கட்சியின் பொருளாளராக அடையாளம் காட்டப்பட்ட ஓ.பி.எஸ்.ஸின் பக்கமே தனது தொண்டர்கள் திரண்டெழுந்து ஆதரிக்க வேண்டும் என்பதையே அம்மாவின் ஆன்மாவும் உளமார விரும்பும்.

இதுவே, சத்தியமான உண்மை.

இதனை, கழகமே உலகமென வாழும் அம்மாவின் பிள்ளைகளும், மக்கள் திலகத்தின் மாசற்ற பக்தர்களும் கருத்தில் சுமந்து களத்துக்கு வரவேண்டும். 

அண்ணா தி.மு.க என்னும் ஆலவிருட்சத்தை வேரோடு வீழ்த்த நினையும் எடப்பாடியின் விஷமத்தை வேடிக்கையாகவும் கேளிக்கையாகவும் கடந்து போகாமல்,

இலை கொண்ட இயக்கத்திற்கு அதன் பொன்விழா ஆண்டில் ஏற்பட்டிருக்கும் பேரபாயத்திலிருந்து, அதனைக் காத்து, கரை சேர்க்க கழகச் சிப்பாய்கள் ஒன்றுதிரள வேண்டும்.

இதன் மூலம், எடப்பாடியின் அரசியல் அபகரிப்பை முறியடித்து, கழகத்தின் ஜனநாயகம் காத்திட அனைவரும் அணிவகுக்க வேண்டும்; இது தான் மக்கள் திலகம் மற்றும் மகராசி அம்மா ஆகிய இருவரது ஆன்ம விருப்பமாகும்.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
*

Share this story