சசிகலாவுடன் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு; அரசியலில் பரபரப்பு

vaithil1

இன்று மதியம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சசிகலா தஞ்சையில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடித்து விட்டு வெளியே வந்தார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ.வும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார். இதையடுத்து இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டனர். வைத்திலிங்கம், சசிகலாவுக்கு இரு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு சசிகலாவும் புன்சிரிப்புடன் வணக்கம் தெரிவித்தார்.

அப்போது வைத்திலிங்கம் தனக்கு இன்று பிறந்தநாள் என கூறி சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார். உடனே சசிகலா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சாக்லெட்டுகள் வழங்கினர்.

பின்னர் இருவரும் சில நிமிடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே என்ன பேசுகிறார்கள் என கவனித்தனர். இந்த சந்திப்பு சில நிமிடம் நீடித்தது.

பின்னர் சசிகலா, வைத்திலிங்கம் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர்.

அ.தி.மு.க. விவகாரம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் இன்று சசிகலாவும், ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்து பேசிக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்செயலாக இந்த சந்திப்பு நடந்ததாக வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Share this story