ஓர் வழியும், நேர் வழியும் ஓபிஎஸ். வழியே : மருது அழகுராஜின் 'நாளை நமதே' தெளிவுரை.. 
 

marudhu42

'மொத்த தொண்டர்களும் உணர்ந்து, ஒன்று திரண்டு வென்று காட்டும் காலம் வெகு விரைவில் நடந்தேறும் என்பது நிச்சயம்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் முழங்கியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. என்பது, கடந்த நான்கரை ஆண்டு காலம் கூடிக் கொள்ளை அடித்த கொள்ளையர்களின் கூட்டமைப்பாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதற்கும், அண்ணா தி.மு.க வின் அடிமட்ட தொண்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆட்சியின் கடைசி நாள் வரை, கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே கதவு திறந்து விட்ட மேற்படி குறுநில மன்னர்கள்.

இப்போது, தொண்டர்கள் எல்லாம் ஓ.பி.எஸ். பக்கமாக அணி திரள்வதை தடுக்க வழி தெரியாது தவிக்கின்றனர்..

எடப்பாடிதான் தி.மு.க. வை உக்கிரமாக எதிர்ப்பவர் என்கிற மாயயை உருவாக்கி, அதன் மூலம் தொண்டர்களை ஏமாற்ற எடப்பாடி வகையறாக்கள் ஏகப்பட்ட குரளி வித்தைகளை செய்து வருகின்றனர்.

ஆனால், கொடநாடு கொலை-கொள்ளை விவகாரம்.. 

 4500 கோடி நெடுஞ்சாலை துறை ஊழல்கள்....

ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள்..

இரண்டு லட்சம் டன் நிலக்கரி காணாமல் போன விவகாரம்..

அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை  விவகாரத்தில் எடப்பாடி மீதான குற்றச்சாட்டுகள்..

பதினொரு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டதில் நடந்த முறை கேடுகள்..

உள்ளிட்ட எதிலும் முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாமலும், அவற்றின் மீது மேல் நடவடிக்கைகளை முன்னெடுக்காமலும். எடப்பாடி தரப்பை
திமுக.தான் காப்பாற்றி வருகிறது என்பதையும்..

'உன்னை நானும், என்னை நீயும் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவோம்' என்னும்  அவர்களது இரு தரப்பு ஒப்பந்தத்தை தொண்டர்கள் புரிந்துகொண்டு விட்டனர்.

மேலும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, தி.மு.க. வைத்திருக்கும் ஒரே தேர்தல் நம்பிக்கை என்பது.. அ தி மு க வுக்குள் எடப்பாடி ஏற்படுத்தும் பிளவை மட்டுமே.

இந்த பிளவை 2024 நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, 2026 சட்ட மன்ற தேர்தல் வரை, அதனை கொண்டு செலுத்த வைத்து.. எடப்பாடி தயவிலேயே தங்கள் எதிர்காலத்தை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என தி.மு.க திட்டமிடுகிறது.

இதனை, அதிமுக. தொண்டர்கள் புரிந்துகொண்டு, எடப்பாடி இல்லாத  அதிமுக.வை, கட்டமைக்க முடிவெடுத்து விட்டனர்.

தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்.. ஓர் வழி நின்று, நேர் வழி சென்றால் நாளை நமதே என்று மக்கள் திலகம் எம் ஜி ஆர் சொன்ன அந்த மகத்தான வழி.. மகராசி அம்மா அடையாளம் காட்டிய ஓ.பி.எஸ் ஸின் உத்தம வழி தான்.. என்பதை மொத்த தொண்டர்களும் உணர்ந்து, ஒன்று திரண்டு வென்று காட்டும் காலம் வெகு விரைவில்  நடந்தேறும் என்பது நிச்சயம்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story