மக்கள்தான் சொல்ல வேண்டும் : சபாநாயகர் அப்பாவு கருத்து

appavu2

தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை பேசியது ஏன் என்பது குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சினை சட்டமன்றத்துக்கு உள்ளே வரவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியேதான் இந்த பிரச்சினை வந்தது. தமிழகம் என்று பேசிய வார்த்தையை என்ன நோக்கத்தில் சொன்னேன் என்பதற்கு கவர்னர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

சட்டமன்றத்துக்குள் நடந்த விவகாரத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. கவர்னரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். நான் இந்த விஷயத்தில் கவர்னருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.

கவர்னர் பொது வெளியில் இப்படி சர்ச்சையான வார்த்தையை பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைதான். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக தமிழகம் பல உயிர் தியாகங்களை செய்துள்ளது.

சவுந்தர பாண்டியனார் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாடு என்ற பெயர் வர உயிரை மாய்த்துக் கொண்டார். அண்ணா நோய் வாய்ப்பட்டு இயலாமல் இருந்த நிலையிலும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டது வரலாறு.

எனவே தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழகம் என்று அழைத்தது சரியான வார்த்தையாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story