பெரியார் திடலும் பெருமாள் திடலாகும் : மருது அழகுராஜ் சாட்டையடி

marudhu9

ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றுரைத்த பிரபலங்களின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சைவத்திற்கும் வைணவத்திற்கும் வெவ்வேறான அறநிலையத்துறை வேண்டுமென தமிழக அரசுக்கு திருமாவளவனால் கோரிக்கையும் வைக்கப்பட்டது.

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல், இது தொடர்பான விவாதங்கள் இணையதளங்களில் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

இந்து மதத்து நம்பிக்கைகளை கேள்வி கேட்பதாலும் கேலி பேசுவதாலும் ஏதோ தங்களுக்கு சமூகத்தின் மத்தியில் ஒரு அதிமேதாவித்தனம்  கிடைப்பதாகவும்.. மேலும், இந்து மதத்தின் மீதான விமர்சன தாக்குதல்களை இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மை இன மக்கள் ஆதரிப்பதாகவும், சில அடி முட்டாள்கள் கற்பனை செய்து கொண்டு, வரம்பு மீறி இந்து மதத்தை விமர்சனம் செய்கிறார்கள்.

பிற மதங்கள் குறித்து, முகம் சுழிக்கும் வகையில் விமர்சனங்கள் செய்தால்..அபயம் தேடி அநேக நாடுகளில் தஞ்சம் கேட்க வேண்டியிருக்கும். 

ஆனால், இந்து மதத்தை இழிவு செய்தாலோ அவர்களுக்கு பகுத்தறிவுவாதி என்றும், சமூக ஆர்வலர் என்றும் அடையாளங்களுடனான விளம்பர வெளிச்சங்கள் இந் நாட்டில் இனாமாகவே அவர்களுக்கு கிடைக்கும்.. 

இதுவே சாத்வீக மதமாகிய இந்து மதம்  பலரது ஈவ் டீசிங்குகளை சந்திப்பதற்கு காரணமாக இருக்கிறது.

ஆனால்... இந்த நிலை நிச்சயம் மாறத்தான் போகிறது. 

மசூதிகளின் ஓர் வெள்ளிக்கிழமையும்.. தேவாலயங்களின் ஒர் ஞாயிறு பிரார்த்தனையும்...இஸ்லாமிய கிறிஸ்தவர் வாக்குகள் யாருக்கு என்பதை தீர்மானிப்பது போல.. 

ஐயனார் கோவிலிலும் அம்மன் கோவிலிலும் பெருமாள் சிவாலயங்களிலும்  இந்துக்கள் ஒன்று கூடி தேர்தல் காலங்களில், தங்களது ஓட்டுக்களை யாருக்கு செலுத்துதல் நல்லது என கூடி முடிவெடுக்கும் காலம் ஒன்று சத்தியமாக விரைவில் உருவாக்கத்தான் போகிறது.

இதனை தி.மு.க. விரும்புகிறதோ இல்லையோ, திருமாவளவன் வெற்றிமாறன் போன்றோர் உருவாக்காமல் விட மாட்டார்கள்.

அந்த நிலை வரும்போது, ஒருவேளை  பெரியார் திடல் கூட பெருமாள்  திடலாகக்கூட பெயர் மாறிப் போகலாம்.

எனவே, தொடர்ந்து அவசியமற்ற வகையில் சீண்டலுக்கு உள்ளாகும் இந்து சமுதாய மக்கள், இனி ஒரு விதி செய்ய வேண்டிய அவசியமும் அவசரமும் தமிழகத்தில் உருவாகிவிட்டது என்றால், அதனை மறுக்க முடியாது.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story