அரசியல் சதுரங்கம் : சந்திரபாபு நாயுடுவுடன், நடிகர் பவன் கல்யாண் திடீர் சந்திப்பு ஏன்?

By 
sena

ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் கூட்டணி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அங்கு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்கு பவன் கல்யாண் வந்தார். பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு தலைவர்களும் முறைப்படி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: ஆந்திராவில் தற்போதைய சூழ்நிலை நெருக்கடி நிலையை விட மோசமானதாக உள்ளது.

இங்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எல்லா எதிர்க்கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம். இந்த விவகாரத்தை நாங்கள் மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம். அத்தகைய சூழ்நிலையில் தலையிடுவதற்கு மத்திய அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய பயனாளிகளை குறைப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய அரசாணை, நெல் விவசாயிகளுக்கு லாபகரமான விலை தராதது, எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதித்தோம் என தெரிவித்தனர்.

தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனா கட்சியும் கூட்டணி சேருவதற்கான சாத்தியம் குறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளிக்கையில், ஜனநாயகமும், அரசியல் கட்சிகளும் இயல்பாக செயல்படுவதற்கு அனுமதிக்கப்படுகிறபோது, கூட்டணி பற்றி விவாதிக்கப்படும் என்றார்.
 

Share this story