அரசியல் பரபரப்பு : டிடிவி தினகரனுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு

By 
ttv3

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று வந்தார். 

தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் வந்தபோது, ஓ.பி.எஸ் ஆதரவாளரான தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சையதுகான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

டி.டி.வி.தினகரனுக்கு சால்வை அணிவித்த சையதுகான் அவருடன் ரகசியமாக 10 நிமிடம் பேசினார். 

ஓ.பி.எஸ்-ன் தீவிர ஆதரவாளரான சையதுகானின் இந்த நடவடிக்கை அரசியல் விமர்சகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

அ.தி.மு.கவில் ஒற்றைதலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் எடப்பாடி, ஓ.பி.எஸ் தலைமையில் 2 அணிகள் செயல்பட்டு வருகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எம்.எல்.ஏ, நிர்வாகிகள் உள்பட அதிகளவில் செல்வாக்கு உள்ளது. 

இதனால், இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை நீக்கி வருகிறார். 

பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி உள்பட முக்கிய நிர்வாகிகளை நீக்குவதாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஓ.பி.எஸ்-ம், சசிகலாவும் இணைந்து செயல்பட வேண்டும் என தேவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளர் சையதுகான் தினகரனை வரவேற்று ரகசியமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின்பேரிலேயே சையதுகான் வரவேற்பு அளித்தாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.
*

Share this story