ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தமிழகம் முழுவதும் திடீர் ரத்து..

rss2

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் கடந்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழக காவல்துறையில் சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் உரிய அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் நிலவிய சூழலை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு போலீசார் மீண்டும் அனுமதி மறுத்தனர்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது நாளை (6-ந்தேதி) ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க கோர்ட்டு அறிவுறுத்தியது. இது தொடர்பான வழக்கு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது உளவுத்துறை அறிக்கையின்படி எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை தமிழக காவல்துறை கோர்ட்டில் தெரிவித்தது.

கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதிக்க முடியும் என்றும், 24 இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 23 இடங்களில் உள் அரங்குகளில் கூட்டம் நடத்தலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு 44 இடங்களில் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது.

ஆனால் இதற்கு 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அர்.எஸ்.எஸ். அணிவகுப்பை பொது இடங்களில் நடத்தக்கூடாது, லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது, விளையாட்டு மைதானங்கள் மற்றும் கூட்ட அரங்குகளில் மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக பேசக்கூடாது, இந்திய இறையாண்மைக்கு தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படக்கூடாது என்பது உள்பட 11 நிபந்தனைகளை ஐகோர்ட்டு விதித்திருந்தது.

ஐகோர்ட்டு விதித்துள்ள இந்த நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், குமரி மாவட்டம் அருமனை, நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர்த்து மீதமுள்ள 44 இடங்களிலும் நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய நோட்டீசை போலீஸ் சார்பில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

ஆனால் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் இந்த நோட்டீசை வாங்க மறுத்து விட்டனர் என்றும், இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அனுமதி தொடர்பாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். இதற்கிடையே நாளை 44 இடங்களில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை ரத்து செய்வதாக அதன் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் கொரட்டூர் பகுதியில் நடைபெற இருந்த அணிவகுப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு என்பது ராணுவ அணிவகுப்பு போன்றே நடைபெறும். வெள்ளை சட்டை, காக்கி டிரவுசர், கருப்பு கலர் தொப்பி அணிந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சிறிய லத்தியை வைத்துக் கொண்டு மிடுக்குடன் அணி வகுப்பில் நடந்து செல்வார்கள்.

அணிவகுப்பில் முதலில் ஒருவர் தலைமை ஏற்று செல்வார். அவரது பேண்டு வாத்திய குழுவினருடன் சாலை ஓரமாகவே போக்குவரத்து இடையூறின்றி அணி வகுப்பு நடைபெறுவது வழக்கம். குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் அணிவகுப்பு முடியும் இடத்தை சென்று விடுவோம். இத்தனை ஆண்டுகளாக அணிவகுப்பு என்பது சாலைகளில்தான் நடந்து உள்ளது.

ஆனால் சென்னை ஐகோர்ட்டு ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்த முடியாத அளவுக்கே நிபந்தனைகளை விதித்திருப்பதாக கருதுகிறோம். எனவே நாளை ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு நடைபெறவில்லை. அது ரத்து செய்யப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு மற்றும் நிபந்தனைகளை தளர்த்தி, பொது வெளியில் எப்போதும்போல ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய முடிவு செய்து உள்ளோம்.

இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு விவகாரத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுவதால் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் சென்னையில் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் ஐகோர்ட்டு விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவு தனி நீதிபதி உத்தரவாகும். இதனை எதிர்த்து ஐகோர்ட்டு பெஞ்சில் முறையிட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

வருகிற திங்கட்கிழமை (7-ந்தேதி) இது தொடர்பாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story