ராகுல் காந்தி பாதயாத்திரை: தேசியக்கொடி வழங்கி, முதல்வர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்

By 
padayatra

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார். இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இதில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.அதை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி, அங்கிருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.

150 நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்கிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

Share this story