மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் : பாதயாத்திரையில் சுவாரஸ்ய நிகழ்வு..

dream

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனியில் ராகுல் காந்தி கடந்த நவ.29-ம் தேதி ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 11-ம் வகுப்பு மாணவிகள் ஷீத்தல், லகானியா, 10-ம் வகுப்பு மாணவி கிரிஜா ஆகியோர் அவரை சந்தித்தனர்.

மாணவிகளின் கல்வி, எதிர்கால லட்சியம் குறித்து ராகுல்காந்தி கேட்டறிந்தார். அப்போது 3 மாணவிகளும் ஹெலிகாப்டரில் பறக்க ஆசையாக இருப்பதாக ராகுல் காந்தியிடன் வெள்ளந்திதனமாக கூறினர். மாணவிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

கடந்த 8-ம் தேதி ராஜஸ்தானின் கோடா பகுதியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடர்ந்தார். அப்போது ராஜஸ்தானின் பண்டி பகுதியில் இருந்து சவாய் மாதோபூருக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் பயணத்தின்போது மத்திய பிரதேசம் உஜ்ஜைனியை சேர்ந்த ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகளையும் ராகுல்காந்தி தன்னுடன் அழைத்துச்சென்றார்.

விமானியும், ராகுல் காந்தியும் இணைந்து ஹெலிகாப்டரின் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் கொடுத்தனர். 3 மாணவிகளும் ராகுல்காந்தியுடன் இணைந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். சுமார் 20 நிமிட பயணத்துக்குப் பிறகு மாணவிகள் விடைபெற்றனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், முதல்முறையாக ஹெலிகாப்டரில் சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் ராகுல் காந்தியுடன் பயணம் செய்ததை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம். எங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.

குடும்பம், சமுதாயத்தை பார்க்காமல் எங்களுக்கு எது விருப்பமோ அந்த துறையை தேர்வு செய்து படிக்க ராகுல் காந்தி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர்.

Share this story