ராகுல் நடைபயணம் : உளவுத்துறை எச்சரிக்கை
 

raw1

ராகுல் காந்தி, பஞ்சாப்பில் 11 நாட்கள் பாத யாத்திரையை செய்த பிறகு, நாளை மறுநாள் (19-ந் தேதி) இமாச்சல பிரதேசம் செல்கிறார். இமாச்சல பிரதேசத்தில், ராகுல் காந்தி  ஒரே ஒரு நாள் மட்டும் நடைப்பயணம் செய்கிறார்.

அங்கிருந்து அவர் வருகிற 20-ந்தேதி காஷ்மீருக்குள் நுழைகிறார். காஷ்மீரில் உள்ள லகான்பூர், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி காஷ்மீரில் 8 தினங்கள் நடைபயணம் செய்ய உள்ளார்.

அவரது 3570 கிலோ மீட்டர் தூரத்துக்கான 150 நாட்கள் நடைபயணம் வருகிற 28-ந்தேதி நிறைவடையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் காஷ்மீர் பாத யாத்திரை தொடர்பாக உளவு அமைப்புகள், பாதுகாப்பு நிறுவனங்கள் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

காஷ்மீரில் குறிப்பிட்ட இடங்களில் நடைபயணம் வேண்டாம் என்றும், அது மாதிரியான இடங்களில் காரில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

காஷ்மீரில் பாத யாத்திரையின் போது ராகுல் காந்தியை பாதுகாப்பதற்காக விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நடைபயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக காரில் பயணம் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவரது பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு இன்னும் நடந்து வருகிறது. ராகுல் காந்தி காஷ்மீர் செல்லும் வழியில் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். குடியரசு தினத்துக்கு மறுநாள் அனந்தநாக் வழியாக பாத யாத்திரை ஸ்ரீநகருக்குள் நுழையும். அவர் ஸ்ரீநகரில் இருக்கும் போது ஒரு சிலரே அவருடன் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

அவரை சுற்றி இருக்கும் நபர்களை அடையாளம் கண்டறிய அவரது குழுவுக்கு நாங்கள் அறிவுறுத்தி இருக்கிறோம். அவர் இரவில் தங்கும் இடங்கள் பற்றிய விவரங்களையும் அறிந்து வருகிறோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

ராகுல் காந்தி தற்போது இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவருடன் 8 அல்லது 9 கமாண்டோக்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள்.

Share this story