அரசியலில் இருந்து விலகுகிறேன் : முன்னாள் முதலமைச்சர் திடீர் அறிவிப்பு

smk

முன்னாள் மத்திய மந்திரியும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது தீவிர அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்திற்கு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:

எனக்கு இப்போது 90 வயதாகிறது. என் வயது குறித்து எனக்கு தெரிகிறது. இந்த வயதில் நான் 50 வயதை போல செயல்பட முடியாது. அதனால், பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் முழுமையாக சன்யாசம் பெறவில்லை. கட்சி தலைவர்களுக்கு தேவைப்பட்டால் ஆலோசனை கொடுப்பேன்.

இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும்; பழைய மைசூரு பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன். பா.ஜ.க., என்னை புறக்கணிக்கவில்லை. நான் ஓய்வு பெற்றிருக்கும்போது என்னை புறக்கணிக்கின்றனர் என்ற கேள்வியே எழாது. அரசியலில் யாரும் பென்ஷன் தரமாட்டார்கள். அதனால் என் ஓய்வு குறித்து நான் மேலிடத்துக்கு தகவல் தரும் அவசியம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகும் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கும் அவர் அனுப்பி உள்ளார். கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி நதியின் முக்கியப் பகுதியாக விளங்கும் சோமனஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், அப்போது பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி சட்ட பிரிவில் பட்டம் பெற்றார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் சதர்ன் மெத்தாலசிஸ்ட் பல்கலைகழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது கல்வி சாதனைக்காக அவர் கர்நாடகா மற்றும் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளி-யில் அவரை "ஆக்ஸ்போர்டு கிருஷ்ணா" என்று அழைத்தனர்.

எஸ்.எம்.கிருஷ்ணா புதிய தொழில்நுட்பங்களை பெங்களூரில் செயல்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்தார், மேலும் பெங்களூர் நகரம் உலக நாடுகளைக் கவரும் வண்ணம் வளர முக்கியக் காரணமாக இருந்த காரணத்தால் எஸ்.எம்.கிருஷ்ணா-வை விஷனரி சி.எம். எனவும் அழைத்தனர்.

இந்தியாவின் டெக் ஐகான் ஆகக் கருதப்படும் அளவிற்கு, பெங்களூர் முழுவதும் சப்வே, மேம்பாலங்கள், கேபிள் பிரிட்ஜ் என அதிநவீன கட்டுமானங்களைக் கட்டமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர். பெங்களூரில் இன்று ஐடி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்க முக்கியக் காரணமாகப் பெங்களூரில் உள் கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் உருவாக அடித்தளமிடப்பட்டது.

பயோடெக்னாலஜி துறையில் பிரமாண்ட நிறுவனமான பயோகான், பல அரசு அமைப்புகள், கல்லூரிகள் இவருடைய காலகட்டத்தில் அதிகமாகப் பெங்களூருக்கு வந்தது. தொடக்கத்தில் சட்டக் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய எஸ்.எம். கிருஷ்ணா, 1962-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தீவிர அரசியலில் இறங்கினார்.

1968-ம் ஆண்டே லோக்சபா எம்.பி.யானார். 1970-களின் தொடக்கத்தில் மீண்டும் கர்நாடகா அரசியலுக்கு திரும்பி அமைச்சரானார். பின்னர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு சென்று இந்திரா காந்தி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு கர்நாடகா மாநில துணை முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா. பின்னர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார்.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். பிரஜா சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. என அரசியல் கட்சிகளில் பயணித்த எஸ்.எம். கிருஷ்ணா எம்.எல்.ஏ, எம்பி, முதல்வர், மத்திய மந்திரி, ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

காவிரி நதிநீர் பிரச்சனைகளின் போதும் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட காலங்களிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்தின் விவாத களங்களில் முக்கியமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story