ராகுலுடன் இணைந்து சோனியா நடைபயணம் : நிகழ்வுகள்..

By 
soniya3

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்தியா ஒற்றுமை யாத்திரையை கடந்த மாதம் 7-ந்தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழகம், கேரளா வழியாக நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி கடந்த 30- ந் தேதி முதல் கர்நாடகா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

தசரா திருவிழாவுக்காக 4, 5-ந் தேதிகளில் கர்நாடகாவில் விடுமுறை அளிக்கப்பட்டதால் ராகுல் காந்தி யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு மைசூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இதற்கிடையே உடல்நலக்குறைவுக்காக வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்க முடிவு செய்தார்.

இதற்காக அவரும் 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்துக்கு புறப்பட்டு வந்தார். கூர்க் பிராந்தியத்தில் உள்ள ஓட்டலில் அவர் தங்கி இருந்தார். நேற்று அவர் பேகூர் கிராமத்தில் உள்ள ஆலயத்துக்கு சென்று விஜயதசமி வழிபாட்டில் ஈடுபட்டார். அந்த ஆலயத்தில் அவர் நீண்ட நேரம் இருந்து பூஜை செய்தார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கே அவர் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்துக்கு புறப்பட்டு வந்தார். அங்கு ஜகன்னஹள்ளி என்ற இடத்தில் ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அவருடன் சோனியா காந்தியும் இணைந்து கொண்டார். பாண்டவபுரம் தாலுகாவில் இருந்து ஏராளமான காங்கிரசார் அந்த நடைபயணத்தில் பங்கேற்றனர்.

சோனியா நடைபயணம் தொடங்கியதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் சோனியா புன்னகை ததும்ப புத்துணர்ச்சியுடன் நடைபயணத்தை மேற்கொண்டார். சோனியாவின் ஒரு பக்கத்தில் ராகுல் காந்தியும், மற்றொரு பக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நடந்து வந்தனர்.

சோனியாவை பார்ப்பதற்கு வழிநெடுக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் சோனியா அருகில் செல்ல ஆர்வம் காட்டினார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக இருந்தது. பெரும்பாலான இடங்களில் சோனியா அருகில் யாரையும் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் சோனியாவுக்கு 2 தடவை கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மிகவும் சோர்வடைந்த சோனியா காங்கிரஸ் தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். 2016-ம் ஆண்டு வாரணாசியில் ரோட் ஷோ நடத்திய பிறகு சோனியா எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் அவர் முதன்முதலாக நடைபயணத்தில் பங்கேற்று உள்ளார். தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ள சோனியா ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தி இருந்தனர். என்றாலும் அதையும் மீறி இன்று நடைபயணத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

சோனியா மேற்கொண்டுள்ள நடைபயணம் அடுத்து தும்கூர், சித்தர துர்கா, பல்லாரி, ரெய்ச்சூர் மாவட்டங்கள் வழியாக தெலுங்கானாவுக்கு செல்ல இருக்கிறது. தொடர்ந்து சோனியா நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த நடைபயணத்தின் போது சில இடங்களில் அவர் பொது கூட்டங்களில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல்லாரி நகரில் பிரமாண்ட கூட்டத்தில் சோனியா பேசுவார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். கர்நாடகாவில் 21 நாட்கள் இந்த பாத யாத்திரை நடப்பதால் காங்கிரஸ் தொண்டர்களிடம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தியா ஒற்றுமை யாத்திரை 5 மாதங்கள் நடைபெற உள்ளது. அடுத்தக்கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த மாநிலத்தில் ராகுலுக்கு மிகப்பெரிய உற்சாக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Share this story