நீட் தேர்வு விலக்கு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் உரை
 

By 
neet3

சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 
அப்போது அவர் பேசியதாவது : 

'கொளத்தூர் தொகுதியிலிருந்து நான், மூன்று முறை உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பது அனைவருக்கும் தெரியும். 

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன். 

இப்பொழுது முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு இந்தத் தொகுதியில் பணியாற்றக்கூடிய வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன். இந்த இரண்டையும் நான் வேறுபடுத்திப் பார்க்கவில்லை, இரண்டையும் ஒன்றாகத்தான் நான் கருதுகிறேன். 

எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிற காரணத்தில் எவ்வளவு பளு, எவ்வளவு பணி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். 

ஆகவே, இந்த சூழ்நிலையிலும், எப்படி எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில் நான் பணியாற்றி இருக்கிறேனோ, அதைவிட இன்னும் அதிகமாக இந்தத் தொகுதிக்கு பணியாற்றிட வேண்டும் என்று விரும்பக்கூடிய நிலையில் இருந்தாலும், எப்படியாவது பத்து நாளைக்கு ஒரு முறையாவது இந்த தொகுதிக்கு வர வேண்டும் என்று முடிவு செய்து அந்த பணியை நிறைவேற்றி வருகிறேன். 

கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது இன்னும் அதிகமான அளவிற்கு எனக்கு பெருமை, சிறப்பு, வரவேற்பு கிடைக்கிறது என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. 

ஆனால், அதைவிட எனக்கு ஒரு திருப்தி, எனக்கு ஒரு மன திருப்தி ஏற்படுகிறது என்பதை நான் இங்கு சொல்லித்தான் தீரவேண்டும். திமுக முன்னோடிகளுக்கு 328 பேர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பொற்கிழி வழங்கப்படுகிறது. 

அந்த பொற்கிழி வழங்கப்படுகிற காரணத்தால், அதை பெறக்கூடியவர்கள் ஏதோ நீங்கள் ஆற்றிய பணிகளுக்கு கைமாறு செய்கிறோம் என்று நீங்கள் கருதவேண்டிய அவசியம் இல்லை. 

உங்கள் உழைப்பிற்கு, உங்கள் தியாகத்திற்கு, நீங்கள் இல்லையென்றால் நான் முதலமைச்சராக இல்லை, நீங்கள் இல்லையென்றால், மேயர் இல்லை, சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஏன், இந்தக் கட்சியே இல்லை. 

நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் எல்லாத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருந்தாலும், 

எல்லாத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகளை நாம் செய்து கொண்டிருந்தாலும், கல்விக்கும் மருத்துவத்துக்கும் நாம் அதிகமான அளவிற்கு அக்கறை செலுத்தி கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. 

அந்த அடிப்படையில்தான் சட்டமன்ற அலுவலகத்தில் தந்த மனுக்கள், நேரடியாக என்னிடத்தில் தந்த மனுக்கள், வருகிற வழியெல்லாம் பல இடங்களில் மாணவ மாணவிகள் என் கையில் தந்திருக்கக்கூடிய மனுக்கள் எல்லாம் பரிசீலித்து அந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, உதவித் தொகை இந்த விழாவில் வழங்கப்பட இருக்கிறது. 

நீட் என்கிற தேர்வு எழுதினால் தான் மருத்துவப் படிப்பை தொட முடியும் என்ற ஆபத்தான ஒரு நிலை. 

ஆகவே இந்த நீட் உடனே அகற்றப்படவேண்டும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அதற்கு விலக்கு அளித்திட வேண்டும் என்று நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம், குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

அந்த வகையில் நம்முடைய தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கிறார்கள். 

அதில், முதலில் அரியலூர் பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்கிற சகோதரி, பள்ளி தேர்வில் அதிகமான அளவிற்கு மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட் தேர்வு வருகிற காரணத்தால் அந்த சகோதரி எண்ணிக்கொண்டிருந்த கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அதிர்ச்சிக்கு ஆளாகி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி உங்களுக்கு எல்லாம் தெரியும். 

அதனால்தான், முதலில் நாம் அந்த மாணவிகளுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான், நம்முடைய கொளத்தூர் தொகுதியில் அனிதா என்கிற பெயரிலேயே அச்சீவர்ஸ் அகாடமி என்ற அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் படிப்பிற்கு, தகுந்த வேலையை பெற வேண்டும் என்பதற்காக பயிற்சிகளை நாம் கடந்த சில ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறோம். 

அதேபோல், தையல் இயந்திரங்களை தந்து, அதில் பயிற்சி பெற்று அதன் மூலமாக தங்களுடைய குடும்பத்தை, தங்களுடைய வாழ்க்கையை, வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தை 349 மகளிருக்கு அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருக்கக்கூடிய அந்த சகோதரிகளுக்கு இங்கு வழங்க இருக்கிறோம். 

திமுகவை பொறுத்தவரை, ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும், மக்களுக்காக ஏழை, எளியவர்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காக, பாடுபடக்கூடிய ஒரு இயக்கம் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்' என்றார்.
*

Share this story