சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை : முதல்வர் ஸ்டாலின் பேச்சு
 

By 
supreme1

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 9 அடுக்கு நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, குறிப்பிட்டதாவது :

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழக்கறிஞர்களின் கோரிக்கைகையான தமிழ் நாடு வழக்கறிஞர்கள் நலநிதி மூலம் வழங்கப்படும் சேமநல நீதியானது ரூபாய் 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

அதோடு கொரோனா பெருந்தொற்றால் உயரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையை மாநில அரசு விரைவில் வழங்கும்.

இந்த நேரத்தில் இன்னொரு நல்ல செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். 

சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14-ந்தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் இயங்கிவரக் கூடிய பல்வேறு நீதிமன்றங்களை, ஒரு புதிய 9 மாடி கட்டிடத்தில் அமைக்கக்கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உள்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் பல்வேறு நீதி மன்ற கட்டிடங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-ந்தேதி அன்று 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு இந்த அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

அதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அந்த கட்டிடம் அமைந்தால் நீதித்துறை உள்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தியாகும் என்பதில் ஐயமிலை.

இந்த தருணத்தில், நீதித் துறையே இங்கு வந்து முழுமையாக வீற்றிருக்கும் இந்த மேடையில் மாநிலத்தின் சார்பாக சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன். 

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ்மொழி உயர்நீதி மன்றத்திம் வழக்காடும் மொழியாக ஆக்கப்பட வேண்டும். 

பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நலனை கருத்தில் கொண்டு உச்சநீதி மன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் ஆகிய இந்த 3 கோரிக்கைகளை இங்கு வந்துள்ள உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர்களுக்கு முன்பு நம் அனைவரின் சார்பாக நான் விடுத்திருக்கின்றேன்.

நம் மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதியரசரும், தமிழ் நாட்டில் இருந்து டெல்லி சென்று உச்ச நீதி மன்றத்தின் நீதியரசராக செயலாற்றக் கூடிய நிதியரசர்களும் அதற்கு துணை நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.

Share this story