தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

ramadoss

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழறிஞர் டிட்டோனி க.இரா.முத்துச்சாமி பேசா நோன்பு மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அவர் இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ் பயிற்றுமொழி சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவது சாத்தியமே. தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆட்சியாளர்கள், தங்களின் அதிகாரவரம்புக்குட்பட்ட தமிழ் பயிற்று மொழி சட்டத்தை இயற்றத் தயங்குவது முரணாக உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழ் செழிக்க வேண்டுமானால் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். இதை உணர்ந்து தமிழ் பயிற்று மொழி சட்டத்தை அடுத்த பேரவைக் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

அதன் மூலம் தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டு வந்து, அவரது நாவிற்குள் அடைபட்டுக் கிடக்கும் அன்னை தமிழுக்கு விடுதலை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share this story