சென்னையில், பாப்புலர் பிராண்ட் தலைமை அலுவலகத்துக்கு, தமிழக அரசு சீல் வைப்பு

By 
popular

இந்தியாவில் செயல்பட்டு வந்த பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்டு அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது.

இதில் பல முக்கிய தஸ்தாவேஜூகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் அடிப்படையில் பாப்புலர் பிரண்டு அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த 23-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது பல இடங்களில் வன்முறையும் மூண்டது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பாப்புலர் பிரண்டு அமைப்பின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். நேற்று கோழிக்கோட்டில் உள்ள பாப்புலர் பிராண்டு அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.

இதற்கிடையே தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்டு அமைப்பு நிர்வாகிகளின் காவல் நேற்றுடன் முடிந்தது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 20-ந் தேதி வரை 21 நாட்கள் காவலை நீட்டித்து என்.ஐ.ஏ. கோர்ட்டு உத்தரவிட்டது.

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கிருந்து தான் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களுக்கு ஆவணங்கள், பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.

தமிழக பாப்புலர் பிரண்ட் ஆப் நிர்வாகிகள் இந்த அலுவலகத்தில் அமர்ந்து தான் ஆலோசனை செய்வார்கள். மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த அலுவலகத்தை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்கான நடவடிக்கைகள் இன்று காலை எடுக்கப்பட்டன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Share this story