பொதுவெளியில் கவர்னர் இவ்வாறு பேசியதை தவிர்த்திருக்கலாம் : சபாநாயகர் அப்பாவு

By 
appavu

நெல்லையில், சபாநாயகர் அப்பாவுவிடம் செய்தியாளர்கள்,' கவர்னர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு தொடர்பாக ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது பற்றி கேட்டனர். அப்போது சபாநாயகர் கூறியதாவது:-

கவர்னரை போல் நானும் பொதுவான பதவியில் இருப்பவர். எனினும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. கவர்னர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவ்வாறு கூறினார் என தெரியவில்லை. அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆதாரம் அழிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்க்கலாம்.

அதனை விட்டு விட்டு பொதுவெளியில் கவர்னர் இவ்வாறு பேசியதை தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து. கவர்னர் கோவை சம்பவத்தில் அரசு விரைவாக செயல்பட்டது என கூறிய நிலையில், தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

கார் வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து முழுவிபரத்தையும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு விளக்கி உள்ளார். 4 நாட்களாக ஆய்வுக்கு பின்னர் காவல்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி, இந்த வழக்கினை என்.ஐ.ஏ.க்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டவர்களை முபின் சந்தித்து பேசினார். இதுகுறித்து ஏற்கனவே அப்போதே என்.ஐ.ஏ. அவரிடம் விசாரணை நடத்தியது. பின்னர் எதற்காக அவரை விடுவித்தது என தெரியவில்லை.

தற்போது கூட ஒரு விமர்சனம் வருகிறது. பா.ஜ.க.வும் என்.ஐ.ஏ.வும் சேர்ந்து அவருக்கு பயிற்சி கொடுத்து அனுப்பியதாக விமர்சனம் வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் கூறுபவர்களுக்கு என்ன பதிலோ, அதுதான் கவர்னர் அவர்களுக்கும் பதிலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story