விடியும் வேளை வரப்போகுது; தர்மம் தீர்ப்பை தரப் போகுது : ஓபிஎஸ் தரப்பு முழக்கம்

ஜனநாயகத்திற்கு புறம்பாகவும், தொண்டர்களின் முடிவுக்கு எதிராகவும் கட்சியை அபகரிக்க கத்தை பணம் கொண்டு அலையும் எடப்பாடியின் நாலாந்தர அரசியலுக்கு எதிராக..
கரன்சிக்கு மயங்காத காளைகளாக, கோடிகளுக்கு மண்டியிடாத கொள்கைச் சிப்பாய்களாக தர்மத்தின் தலைவன் ஓ.பி.எஸ் பின்னால் அணி வகுத்து நிற்போரது லட்சியம் வெற்றி காணும் என்பது சத்தியம்.
ஒரு சாதாரண தொண்டன் கூட, கட்சியை வழிநடத்தும் தலைமைக்கு வரமுடியும் என்கிற கழக நிறுவனர் புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் கொள்கைக்கு மாறாக பணம் படைத்தவர்களும் அவர்கள் அப்படி குவித்து வைத்திருக்கும் கரன்சியை கொண்டு,
முன் மொழியவும் வழி மொழியவும் என இருபது மாவட்டச் செயலாளர்களை விலைபேசி வளைக்கும் சக்தி படைத்தவர்கள் மட்டும் தான் தலைமைக்கு வர முடியும் என்பதாக, தனக்கு ஏற்றவகையில் கட்சியின் அடிப்படை சட்டவிதிகளை தான்தோன்றித்தனமாக மாற்றிக் கொண்டு..
இடி அமீன் எடப்பாடி முன்னெடுத்திருக்கும் ஆக்ரமிப்பு அரசியல் முயற்சியை தகர்த்தெறிய, மக்கள் திலகத்தின் மாசற்ற பக்தர்களும் மகராசி அம்மாவின் பாசமிகு பிள்ளைகளும் முன்னெடுக்கும் போராட்டம் விரைவில் வாகை சூடும் என்பது நிச்சயம்.
'கொடிபிடிக்கும் தொண்டன்தான் தங்களை வழிநடத்தும் தலைவனை தீர்மானிப்பானே தவிர, கொள்ளைக் கூட்டத்தின் பணமூட்டைகள் அல்ல' என்பதை அண்ணா தி.மு.க வின் அடலேறுகள் நிலைநாட்டிக் காட்டும் நேரம் நெருங்குகிறது.
கோட்டை முதல் கொடநாடு வரை.. தான் நடத்தியிருக்கும் கொடிய குற்றங்களில் இருந்து தப்பித்து கொள்ளவும், முறைகேடாக தான் குவித்து வைத்திருக்கும் பணத்திற்கான முதலீட்டுச் சந்தையாக அதிமுக வின் தலைமை பீடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் திட்டமிடும் குத்துக்கோல் பழனிச்சாமியின் தீய நோக்கத்தை...
ஒப்பில்லா பெருந்தலைவி நம்மிடம் ஒப்படைத்துப்போன, தப்பில்லா தனித்தலைவன் செப்புக் கலக்காத சொக்கத் தங்கம் ஓ.பி.எஸ் வழியில் நின்று முறியடித்து காட்டும் நேரமும்.. அந்த வெற்றியை உறியடித்து ஊரெங்கும் கொண்டாடும் காலமும் கூடிவருகிறது.. அடலேறுகளே ஆயத்தமாவோம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.