அரசியல் களத்தில் முன்னெழுந்து நிற்கும் அதிமுக்கியமான கேள்வி : மருது அழகுராஜ் கருத்து

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்திருக்கும் அதே வேளையில், பா.ஜ.க.போட்டியிட முன் வருமானால், அதனை ஆதரிக்க தயார் என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கூறியிருப்பது அவரது முதிர்ந்த அரசியலையே எடுத்துக் காட்டுகிறது.
தன்னால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது என்னும் நிலை வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, அவர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்த போதும்..
இடி அமீன் எடப்பாடி தனது அபகரிப்பு அரசியலுக்கு அது இடையூறாகிவிடும் என்பதால், வழக்கம் போலவே ஒற்றுமையை கெட்ட வார்த்தை என்பதாக கருதிக்கொண்டு ஓ.பி.எஸ் நீட்டும் கரங்களை பதவி வெறி பழனிச்சாமி தட்டி விடுகிறார்.
ஆக, கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை; என்வசம் கரன்சி குவியல் இருக்கிறது என்னும் கர்வத்தில்.. ஒரு மமதை மனநோயாளியாகவே அவர் தொடரும் நிலையில்,
எந்த வகையிலாவது தி.மு.க.வின் தறிகெட்டு அலையும் அரசியல் ஆணவத்துக்கு அணை போட முயற்சிக்கும் ஓ.பி.எஸ்ஸின் மதிநுட்ப அரசியல் தான்.. பா.ஜ.க. போட்டியிட்டால் அவர்களை ஆதரிப்போம் என்பதாகும்.
ஆம்...அ.தி.மு.க. மூன்று கூறுகளாக பிளவுபட்டு நிற்கிறது. தற்போதைய சூழலில், அது ஒன்றுபடவோ அல்லது
ஒருவரை ஒருவர் ஆதரிப்பதற்கோ வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
ஒருவேளை, மூன்று அணிகளும் தனித்தனியே போட்டியிடும் பட்சத்தில், அதில் எந்த ஒரு தரப்பையாவது பா.ஜ.க.ஆதரிக்கும் முடிவை எடுத்தால், எஞ்சிய இரு தரப்பின் எதிர்ப்புக்கு பா.ஜ.க.ஆளாக நேரிடுவது மட்டுமன்றி, அது கூட்டணி பிளவுக்கே காரணமாகிவிடும்.
அதே வேளையில், அந்த மூன்று தரப்பும் ஆதரிக்கும் கட்சியாக பா.ஜ.க.இருப்பதால், பா.ஜ.க.வே போட்டியிடுவதின் மூலம் ஆதரவு நிலைப்பாடுகளை ஒருமுகமாக அக் கட்சி தன் வசப்படுத்த வாய்ப்பாகிறது.
இதன் மூலம், விளிம்பு நிலை வெற்றி அல்லது கெளரவமான தோல்வி என்பது தேர்தல் முடிவாக இருக்கும் பட்சத்தில், பெரியார் மண்ணிலேயே 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சரியான துவக்கத்தை தாமரை இயக்கம் முன்னெடுக்க வாய்ப்பு உருவாகிறது.
இதனை கருத்தில் கொண்டே, ஓ.பி.எஸ். சமிக்ஞை தந்திருக்கிறார். இதனை பா.ஜ.க.பயன்படுத்திக் கொண்டு பயணத்தை தொடங்கப் போகிறதா?
இல்லை, பங்காளிச் சண்டையை பார்த்துக்கொண்டு வெறும் பார்வையாளராக நிற்கப் போகிறதா என்பது தான், அரசியல் களத்தில் முன்னெழுந்து நிற்கும் அதி முக்கியமான கேள்வி.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.