இரண்டாம் தர்மயுத்தம் - தை பிறக்க கழகத்திற்கு வழி பிறக்கும் : ஓபிஎஸ் தரப்பு உறுதி 

krishna2

'தை பிறக்க கழகத்திற்கு வழி பிறக்கும் என்பது சத்தியம், தறுதலை தரைப்பாடியின் அபகரிப்பு அரசியல் அடியோடு அழிந்து ஒழியும் என்பது நிச்சயம்' என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் குறிப்பிட்டுள்ளவை  வருமாறு :

'பாண்டவர்களுக்கு உரிமையுடைய நாடும் கிடையாது. ஐந்து ஊர்கள் இல்லை, ஐந்து வீடுகள் இல்லை, ஒரு ஊசி முனை அளவு இடம் கூட தரமுடியாது என்ற அதே துரியோதனனின்  ஆணவத்தை அரசியல் உலகம் எடப்பாடியிடம் இன்று காண்கிறது.

கெளரவர்கள் நூறுபேர் என்னும் எண்ணிக்கை திமிர் தான்.

அன்று தூது வந்த கிருஷ்ணபரமாத்விடம், அப்படி துரியோதனனை பேச வைத்தது என்றால், அதே திமிர்.. அதே அதர்மம் அனைத்தையும் கொண்டிருக்கும் எடப்பாடியும் ஒரு சதவீதம் கூட ஒன்று பட வாய்ப்பில்லை என்று உறுமுகிறார்.

ஆனால், சத்தியத்தின் வழியில் இருந்து சாணளவும் விலகாது, தர்மத்தை சுமக்கின்ற தலையினின்றும் இறக்காது.. தொண்டர்களின் துணை கொண்டு, உத்தமத்தலைவர் ஓ.பி.எஸ் நடத்தி வருகிற கழகத்திற்கான இரண்டாம் தர்மயுத்தம் வெற்றியை நோக்கி விரைகிறது.

தவறான தருணத்திலும், ஒவ்வாத பருவத்திலும் இரண்டாம் உலகமகா யுத்தத்தை தொடங்கிய ஹிட்லரும் அவனது நாசகார நாசி படையும் ரஷ்யாவின் பனிப்பொழிவுகளில் சிக்கி, அழிந்தொழிந்த அன்றைய சூழலும்...

மடையர் குல திலகமான எடப்பாடியின் அரசியல் பேரழிவை முன்னெடுத்துப் போகும், இன்றைய மார்கழி பனிக்காலமும் ஒன்றெனவே காலம் கருதுகிறது.

ஆம்.. தை முதல் நாளில் பிறந்தவர் ஓ.பி.எஸ் என்றால்,  தை மூன்றாம் நாளில் அவதரித்தவர் கழக நிறுவனர் எம்.ஜி.ஆர்..

ஆக, தை பிறக்க கழகத்திற்கு வழி பிறக்கும் என்பது சத்தியம். தறுதலை தரைப்பாடியின் அபகரிப்பு அரசியல் அடியோடு அழிந்து ஒழியும் என்பது நிச்சயம்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story