அதே ஆர்.கே. நகர் சூழ்ச்சி; அதிர்ச்சி ஆயினும் உண்மை : மருது அழகுராஜ்
 

marudhu91

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பை டி.டி.வி‌க்கே மறுபடியும் கொடுப்பதா? இல்லை, எடப்பாடி கம்பெனிக்கு தருவதா? என்னும் குழப்பத்தில் மூழ்கியிருக்கிறது தி.மு.க. என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ்
தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

அம்மாவின் மறைவுக்குப் பிறகு 2017 ஆர் கே நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டிருந்த நிலையில்..அன்று தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் பெரு வெற்றி பெற்றார். தி.மு.க.டெபாசிட் இழந்தது.  

புரட்சித் தலைவி அம்மா போட்டியிட்டபோது கூட அவரை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துச் சோழன் சுமார் 56000 வாக்குகளை பெற்ற  நிலையில், தினகரன் வெற்றி பெற்றபோது தி.மு.க.வின்   ஓட்டுக்கள் வெறும் 27000 வாக்குகளாக குறைந்து போனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இது குறித்து சிறிதும் கவலை கொள்ளாதவர்களாகவே தி.மு.க.வினர் காட்சியளித்தனர். கட்டுத் தொகை பறிபோனது குறித்து கூட அவர்கள் கலக்கம் கொள்ளவில்லை. 

அக்கவுண்ட் டிரான்ஸ்பர் செய்ததுபோல, வழக்கமான திமுக.வின் வாக்குகள் சரிபாதிக்கும் கீழாக எப்படி சரியும். என்றெல்லாம் பலரும் குழம்பினர்.

ஆனால், உண்மை யாதெனில் அ.தி.மு.க.வின் பிளவு நீடிக்க வேண்டும் என்றால், டி.டி.வி.தினகரன் ஜெயிப்பது அவசியம் என்றும்,

பிளவு நிலையிலேயே அ.தி.மு.க.தொடர்ந்தால் மட்டுமே 2019 நாடாளுமன்ற தேர்தல், அதை தொடர்ந்து 2021 சட்ட மன்ற பொதுத்தேர்தல் என தி.மு.க வெற்றி பெற முடியும் என்றும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க இயலும் என தி.மு.க. தீட்டிய திரைமறைவு திட்டம் தான் அது.

அப்படி அன்று தி.மு.க.வாக்குகளில் இருந்து சுமார் 33 000 வாக்குகளை தினகரனின் தொப்பியில் விழ வைத்தற்கு ஏற்ப  தி.மு.க. தேர்தல் வேலை செய்தது.

இது தான் சத்தியம். இதுவே வெளிச்சத்துக்கு வராத உண்மை.

அப்படி அன்று அவர்கள் போட்ட கணக்கின்படியே 2019 பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2021  சட்டமன்ற தேர்தலிலும் வென்று ஆட்சியை கைப்பற்றியது

இந்த இரண்டு வெற்றிக்கும் முக்கிய காரணமாக ஆர் கே நகரில் ஜெயித்த அதிமுக வின் பிளவுக்கட்சியான அ.ம.மு.க.வும் அதன் அதிபர் தினகரனும் இருந்தார் என்பது நிஜம். இப்போதும் அதே சூழல்..

ஆனால், ஒரே ஒரு வித்தியாசம் அன்று ஆர் கே நகரில் தனியாக போட்டியிட்ட பா.ஜ.க. இன்று அதிமுக வின் கூட்டுக் கட்சியாக இருக்கிறது அவ்வளவு தான்.

ஆக பிப்ரவரி 27 ல் நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் அதே ஆர் கே நகர்  ஃபார்முலாவை பின்பற்றவும் அதன் மூலம் அ.தி.மு.க. வை ஒன்றுபட விடாமல் தடுப்பது என அன்றைய பழைய திட்டம் குறித்து யோசிக்க தொடங்கி விட்டது தி.மு.க..

மேலும், அன்றைய காலகட்டம் போலவே அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வருவதோடு, அதைத்  தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றியின் தொடர்ச்சியை நீட்டிக்க, தி.மு.க.
அதே பழைய திட்டத்தை பயன்படுத்த கணக்குப் போடுகிறது.

இப்ப புரியுதா.. டி டி வி தினகரன் ஏன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நானே போட்டியிடுவேன் என  துள்ளுகிறார் என்பது. எல்லாம் இன்னொரு லட்டுத் தின்னும் ஆசை தான்..

ஆனால், வேடிக்கை என்னவென்றால் கொடநாடு விவகாரம், சம்பந்தி டெண்டர் முறைகேடு இவற்றை முன் வைத்து இப்போது தி.மு.க.வுக்கு புதிய திரைமறைவு கூட்டாளி ஆகியிருக்கும் எடப்பாடியோ, இந்த முறை அன்றைய ஆர் கே நகர் வாய்ப்பை ஈரோடு கிழக்கில் தங்களுக்கு தர வேண்டும் என்று கேட்கிறார்.

இப்போது வாய்ப்பை டி.டி.வி‌க்கே மறுபடியும் கொடுப்பதா, இல்லை எடப்பாடி கம்பெனிக்கு தருவதா என்னும் குழப்பத்தில் மூழ்கியிருக்கிறது தி.மு.க .

அவர்களை பொறுத்தவரை அதிமுக ஒன்று பட்டு விடக் கூடாது. அவ்வளவு தான்.

இந்த சூழ்ச்சியை புரிந்து கொண்டு தான் ஓ.பி.எஸ். பா.ஜ.க.வை களத்தில் இழுத்து விட்டு, அதன் மூலம் திமுக வின் திட்டத்தை முறியடிக்க முயற்சிக்கிறார்.

மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான ஒற்றுமைத் தளத்தையும் அவர்  ஈரோட்டிலேயே கட்டமைக்க நினைக்கிறார்.

இது தெரியாமல் Blood is thicker than water என்னும் வழியில், அல்லது திரைமறைவு சூழ்ச்சி தெரியாமல் எடப்பாடிக்கு உதவப் பார்க்கிறார் அண்ணாமலை..

சரி, எப்படியோ நடக்கப் போவது என்ன..

தகர்க்கப்படுமா தந்திரம், இல்லை அதே திட்டத்தை அமல்படுத்தி ஆதாய அறுவடையை நடத்துமா தி.மு.க.... பொறுத்திருந்து பார்ப்போம்..

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story