தர்மம் நிலைக்கும், தரைப்பாடிக்கு தலைகுனிவு நடக்கும் : ஓபிஎஸ் தரப்பு உறுதி  

By 
admkfinal

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைரமுத்து என்பவரும் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் விசாரித்து வருகிறார்கள். பல கட்டங்களாக தொடர்ந்து நடந்த வழக்கை விசாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், இதுவரை வழக்கு கடந்து வந்த பாதைகளையும் கேட்டனர். 

இந்த பரபரப்பான கட்டத்தில் நேற்று பிற்பகலில், மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுக்குழுவை ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும், தேவைப்பட்டால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட முடியும் என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. 

அதிமுகவின் அடிப்படை விதிகளையே தற்போது மாற்றி அமைத்துள்ளனர், கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியையும் மாற்றியுள்ளனர் என வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை இன்று வெள்ளிக்கிழமை  நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தனர். இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்ய நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இன்று,  இரு தரப்பினரும் வாதங்களை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

'தான் குவித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு, ஒரு கும்பலை திரட்டி, அந்த கும்பலுக்கு தனக்கான தலைமை பட்டாபிஷேகம் நடத்துவதற்கு, அதிகாரம் இருப்பதாக சில செட்டப் விதிகளை கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறாக உருவாக்கிக் கொண்டு..

ஒரு கட்சியையே அபகரித்திட முயற்சிக்கும் எடப்பாடியின் ஜனநாயக விரோதச் செயலை, உச்ச நீதிமன்றம் மூக்கறுக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் தொண்டர்கள் மட்டுமல்ல, தர்ம நியாயத்தை நேசிக்கும் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அது நடைபெறாது போனால், அநேக கட்சிகளை அபகரிக்க.. நாடெங்கும் ஏகப்பட்ட எடப்பாடிகள் பணப்பெட்டிகளோடு புறப்பட்டு விடுவார்கள்.

அத்தகைய சூழலை, கற்பனையிலும் நமது உச்சநீதிமன்றம் அனுமதிக்காது என்பதே எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.


 

Share this story