இது, தேர்தல் கால கரன்சி நடமாட்டம்; ஆக, அறுவடைக் கால தொடக்கம் : மருது அழகுராஜ் எச்சரிக்கை 

By 
marudhu84

'கரன்சிகளின் நடமாட்டமும், சீட்டு நோட்டு இவற்றுக்காக கட்சிகளின் தாவல்களும்- ஊடல்களும் என ஆச்சரிய அத்தியாயங்களுக்கு.. இனிவரும் நாட்களில் கொறச்சல் இருக்காது' 

என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள 'எச்சரிக்கை அறிக்கை' வருமாறு :

தேர்தல் வரும் காலத்தில் எல்லாம், தாங்கள் இதுநாள் வரை, பங்கேற்று இருக்கிற கூட்டணிக் கட்சி தலைமையுடன் உள்ள நெருக்கத்தை குறைத்துக் கொள்வதும், 

கூடவே, எதிர் அணிக்கு தலைமை தாங்கும் கட்சியோடு திடீர் இணக்கம் காட்டுவது..அல்லது அதுபோல நடிப்பது..இன்னும் சொல்லப் போனால், ஒருதலைச் சார்பற்ற நிலைப்பாடு கொண்டிருப்பது போல்..தங்களை மையத்தில் நிலை நிறுத்திக் கொள்வது..

இப்படி, சில அரசியல் கட்சிகள் வாடிக்கையாக தொடருகிற வேடிக்கைகள் துவங்கி விட்டன..

தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதனைத்  தொடர்ந்து அவர்கள்  முன்னெடுப்பதை நாமும் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இதன் அடிப்படை நோக்கம் என்பது, தொகுதிகளின் எண்ணிக்கை பேரத்தை அதிகப்படுத்துவது...

கூடவே, பெருந்தொகைக்கு அடிப்போடுவதும் தான். குறிப்பாக, இதனை தமிழ்நாட்டில் ஒரு சில கட்சிகள்  ஒரு வகை தொழிலாகவே மேற்கொண்டு.. அமோகமான அறுவடையை செய்து வருகின்றன.

இதன் மூலம், ஆட்சி அதிகாரத்தை பிடிக்காமலும், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமலும், மகசூலை அள்ளுகிற பணப்பயிர் அரசியல் விவசாயிகளாக  அவர்கள் தொடர்ந்து விளைச்சல் பார்த்து வருகின்றனர்.

இதில் கூடுதலாக.. தனித்துப் போட்டியிடும் சில கட்சிகள், சிலருக்கு பாதிப்பில்லாத வேட்பாளர்களை போடவும் அல்லது எதிர் வேட்பாளருக்கு பாதிப்பை உருவாக்கும் வகையிலான வேட்பாளரை நிறுத்தவும் என கனத்த தொகையை  கறக்கும் காரியங்களும் தொடர்ந்து வருகிறது.

ஆக மொத்தத்தில் கறுப்பும் வெள்ளையுமாக கரன்சிகளின் நடமாட்டமும், சீட்டு நோட்டு இவற்றுக்காக கட்சிகளின் தாவல்களும்- ஊடல்களும் என ஆச்சரிய அத்தியாயங்களுக்கு.. இனிவரும் நாட்களில் கொறச்சல் இருக்காது.

இவ்வாறு, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story