'இப்படி காமெடி பண்ணுகிறார் எடப்பாடி பழனிசாமி' : முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

By 
madurai6

மதுரை ரிங்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கில் தமிழக வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகன் தியானேஷ்-ஸ்மிர்தவர்ஷினி திருமணம் இன்று நடந்தது. திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது :

நேற்று நெல்லை மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது ஒரு சுவரொட்டியை பார்த்தேன். அதில் ஏ.எம். பி.எம். பார்க்காத சி.எம். என்று வாகனம் இடம் பெற்றிருந்தது. நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதை குறிக்கும் வகையில் அந்த சுவரொட்டியை ஒட்டி இருந்தார்கள்.

ஆனால் என்னை பொறுத்தவரை எம்.எம். (மினிட் டூ மினிட்) சி.எம். என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணாக்காமல் பணி செய்து டி.என்.நம்பர்-1 என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது தான்.

அந்த வகையில் ஒவ்வொரு நிமிடமும் வீணாக்காமல் நம் பணிகளை செய்து வருகிறோம். இந்த சந்தடி சாக்கில் ஒரு காமெடியை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தன்னிடம் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி ஒரு காமெடியை கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே அவரிடம் பேசுவது இல்லை. இந்த நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் பேசுவதாக ஒரு புருடா விட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததோடு உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்த அவர் இப்படி காமெடி பண்ணுகிறார்.

தற்போது அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியே டெம்பரவரி பதவியில் இருக்கிறார். எனவே டெம்பரவரியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக அவர் கூறி வருகிறார்.

நமக்கு நல்லது செய்வதற்கே நேரம் போதவில்லை. எனவே இது போன்ற பொய் பிரசாரங்களை பற்றி பேச நேரம் எங்கே இருக்கிறது? எனவே இருக்கின்ற காலங்களில் இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு மக்களுக்கு நன்மை செய்வோம். மக்களிடம் நம்பிக்கையை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Share this story