தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஈபிஎஸ் வலியுறுத்தல்

edap4

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை நெல் சாகுபடி செய்த சுமார் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இதுபோலவே, தமிழகத்தில் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிகப்படியான விலை கொடுத்து வாங்கிய உரம் மற்றும் அதிகரித்த சாகுபடி செலவு, கூலி உள்ளிட்ட உற்பத்தி செலவுகளுடன் விவசாயிகள் தங்களது உழைப்பைக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டு பயிரிட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதைப் பார்த்து மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.

தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுத்து, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ. 35,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். போதுமான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்றும், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் விளம்பரம் செய்த நிலையில்,

திமுக அரசு முதற்கட்டமாக நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மட்டும் திறக்க வேண்டும் என்றும், முடிந்த அளவு நெல் கொள்முதலை குறைத்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒருசில நேர்மையான அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்தாக மிகுந்த மனவேதனையுடன் விவசாயிகள் செய்தியாளர்களிடம் இந்த அரசை குறை கூறியுள்ளனர்.

எனவே, இந்த அரசு செய்திகளில் வெளியிட்டுள்ளவாறு நிரந்தர மற்றும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாகத் திறந்திட வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். விவசாயப் பெருமக்கள் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேளையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிலப்பரப்புக்கேற்ற வேளாண் கடன் வழங்கப்படவில்லை. எனவே, தனியாரிடம் அதிக வட்டிக்கு விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில், ஈரப்பதம் போன்ற பிரச்சனைகளின் காரணமாக விவசாயப் பெருமக்கள் தாங்கள் பயிரிட்ட நெல்லை, அவசர பணத் தேவையினால் வெளிச் சந்தையில், தனியார் வியாபாரிகளிடம் 60 கிலோ மூட்டை ஒன்றுக்கு சுமார் ரூ. 150 முதல் ரூ. 200 வரை குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அதுவும் வியாபாரிகள் எ.டி.எஸ் 16 ரக நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வதாகவும், மற்ற நெல் ரகங்களை விற்க முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகவும், எனவே, உடனடியாக அனைத்து (நிரந்தர மற்றும் தற்காலிக) நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

முதன் முறையாக, டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்த அரசு வெற்று விளம்பரம் செய்து மார்தட்டியுள்ளது. 2011-ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலேயே டெல்டா மாவட்டங்களில் சுமார் நான்கரை லட்சம் ஏக்கர் நிலத்திற்கும் மேல் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு சாதனை படைத்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எனவே, வீண் விளம்பரங்களில் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு, விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் இந்த அரசு ஈடுபடவும் வலியுறுத்துகிறேன்.

திமுக தேர்தல் அறிக்கை எண் 75-ன்படி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளபடி, உடனடியாக வழங்க வேண்டும் என்று வேளாண் பெருமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த அரசு போதுமான முன் அறிவிப்பு மற்றும் திட்டமிடுதல் இல்லாமல் முன்னதாகவே மேட்டூர் அணையை திறந்த காரணத்தினால், டெல்டா விவசாயிகள் நிலங்களில் முன்னெடுப்பு வேலைகளில் ஈடுபட போதுமான கால அவகாசமின்றி பெருமளவு நீர் கடலில் கலந்து வீணானது.

மேலும், பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் இரண்டாம் மகசூல் பலனை பெறமுடியாமல் பெரும் நஷ்டத்திற்குள்ளாயினர். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு இல்லாததால் விவசாயப் பெருமக்கள், நீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளாகியுள்ள தங்களுடைய பயிர்களுக்கு இழப்பீடு பெறமுடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், சென்ற சம்பா சாகுபடியின்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, அந்த இழப்பீட்டை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். அதிமுக ஆட்சியில் பயிர்க் காப்பீட்டு தொகை உடனுக்குடன் பெற்றுத்தரப்பட்டதையும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டதையும் இச்சமயத்தில் விவசாயிகள் நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.

இன்று கூட, விவசாயச் சங்கங்கள் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி பாதிப்படைந்துள்ள நெற்பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளை உடனடியாக அனுப்பக் கோரியும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உடனடியாக திறந்து, விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் முற்றுகைப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயப் பெருமக்கள் தாங்கள் பாடுபட்டு பயிரிட்டு, அறுவடை செய்த குறுவை நெல்லை சாலைகளில் போட்டு பாதுகாக்கக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது. அதிமுக அரசில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல்லை கொள்முதல் செய்ததையும், தங்களது உழைப்புக்கேற்ற வருவாய் உடனுக்குடன் தங்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதையும், தற்போது இந்த அரசில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதையும் வேதனையுடன் நினைவு கூர்கின்றனர்.

எனவே, இந்த அரசு மேலும் காலதாமதம் செய்யாமல், டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகமெங்கும் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்களை கணக்கெடுக்க, உடனடியாக அதிகாரிகளை அனுப்பிவைக்க வேண்டும் என்றும்; ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000/- இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தர நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறந்து 22 சதவீதம் வரை ஈரப் பதம் உள்ள அனைத்து நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடியையும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*

Share this story