கழகம் காக்க, கரங்கள்  கோர்ப்போம் : மருது அழகுராஜ் முழக்கம் 

marudhu52

'துரோகங்களை தொடர்கதையாக்கிக் கொண்டு..தோல்விகளையே தோரணங்களாக்கிக் கொண்டு.. ஈகைக்கும் வாகைக்கும் இலக்கணம் வகுத்த இயக்கத்தை அழிக்க, மதிகெட்டு அலையும் எடப்பாடியின் கரன்சி பிடியிலிருந்து கழகத்தை காப்பாற்ற உறுதி ஏற்போம்' என அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ், அறிக்கை  வெளியிட்டுள்ளார். 

அதிமுக.வின் ஒன்றரைக்கோடி தொண்டர்களுக்கு அவர் கூறியிருப்பதாவது : 

எடப்பாடி, மெகா கூட்டணி என்று வாய் திறந்த உடனேயே.. பாம்பின் தலை பார்த்து பதுங்குகிற தவளைகள் போல் ஆளை விடு சாமி என பா.ம.க.தொடங்கி அநேக கட்சிகளும் பயந்து ஆளுக்கொரு திசையில் ஓடுகின்றன.

ஆங்காங்கே அமைதியாக ஒதுங்கின்றன என்றால்..இந்த நொந்த நிலை ஏன் வந்தது.?

அண்ணா தி.மு.க.வின் நிழலில் ஒதுங்கும் பாக்கியம் கிடைக்காதா என கூட்டணிக்கு தவமிருந்த காலத்தை இப்படி வலிய அழைத்தாலும், வர மறுத்து பயந்து ஓடும் பரிதாப நிலைக்கு மாற்றியது யார்.?
 
எடப்பாடி என்னும் தலைமைப் பண்பற்ற ஒரு தனி நபரின் பதவி வெறிதானே, இப்படி
அண்ணா தி.மு.க.எனும் கம்பீரக் கோட்டையின் மாண்பை கெடுத்து, அதன் மதிப்பை குறைத்துவிட்டது .

2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், அதனைத் தொடர்ந்து சட்டமன்ற பொதுத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என வரிசை கட்டி வந்த அத்தனை தேர்தல்களிலும் எடப்பாடி வழி நடத்தலில் ஏற்பட்ட படுதோல்விகளும்..பல தேர்களில் போட்டியிடாது ஒதுங்கிய புறக்கணிப்புகளும்..

சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி தேர்தல்களில் கட்சியையே தேடுகிற அளவுக்கு ஏற்பட்ட தலைக் குனிவு தோல்விகளும் என எடப்பாடி ஏற்படுத்தி கொடுத்த காயங்களே..இந்த பரிதாப நிலைக்கு காரணம் என்றிருக்க..

இதற்கு மருந்திட்டு, மறு மீட்பு செய்வதற்கு மாறாக.. கட்சியையும் பிளவுக்கு உள்ளாக்கி.. கூட்டணியையும் சிதைத்து விட்டு, 

இப்போது, புலிக்கு பயந்தவனெல்லாம் என் முதுகில் ஏறிக்கொள்ளுங்கள் என எடப்பாடி அழைப்பது நகைச் சுவையாகும்.

ஆக..துரோகங்களை தொடர்கதையாக்கிக் கொண்டு..தோல்விகளையே தோரணங்களாக்கிக் கொண்டு.. ஈகைக்கும் வாகைக்கும் இலக்கணம் வகுத்த இயக்கத்தை அழிக்க மதிகெட்டு அலையும் எடப்பாடியின் கரன்சி பிடியிலிருந்து கழகத்தை காப்பாற்ற,

அம்மா காட்டிய அடையாளம் ஓ.பி.எஸ். தலைமையில் அணி திரள்வோம். மக்கள் திலகமும், மகராசி அம்மாவும் மடியிட்டு வளர்த்த இயக்கத்தை உயிராக காத்திட உறுதி ஏற்போம்.

இவ்வாறு அதிமுக செய்தித்தொடர்பாளர்  கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story