இன்று, திராவிடம் என்றாலே தமிழ் என கூறி வருகின்றனர் : கவர்னர் ஆர்.என். ரவி பேச்சு

By 
governor1

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம், திருவள்ளுவர் பல்கலைகழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து 156 மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

'தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்படக் கூடிய அளவிற்கு சுருக்கப்பட்டுள்ளது.

பாரதம் என்பது அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான். ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவை இணைத்ததாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.

இந்தியா என்பது ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்ததில்லை. அதேபோல் பாரதம் என்ற சொல், ஆங்கிலேயர்கள் இந்தியா என்று பெயர் வைப்பதற்கு முன்னதாக வந்தது. பாரதியார் கூட பல பாடல்களை பாரதம் என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

அரசியல் கட்சிகள் அதிகாரத்கிற்காக மொழி & சாதி அடிப்படையிலும், சாதியில் உள்ள உட்கட்டமைப்புகளை வைத்து அரசியல் செய்வார்கள். இந்தியா என்பது அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் & ஆன்மிக ஒற்றுமை தான். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story