ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இன்றைய கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு  

By 
opsmarudhu

மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி இன்று ஆலோசனை நடைபெற்றது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

எனக்கு ஏற்பட்ட சோதனையின்போது என்னை தாங்கி பிடித்து நின்று, எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா. கட்சியை கட்டுக்கோப்புடன் நடத்திய அவர், அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர். மனிதாபிமானம் கூட இல்லாமல், சர்வாதிகார போக்கில் ஒருவர் செயல்படுகிறார். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்பதை நீக்கியவர்களை நாடு மன்னிக்காது. ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர், அதை யாராலும் மாற்ற முடியாது.

திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்த்த ஏராளமான தியாகங்களை செய்தவர் எம்ஜிஆர். தலைமை பதவிக்கு வருபவர்களை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என கூறியவர் எம்ஜிஆர். அவர் கொண்டு வந்த சட்ட விதிகளை யாராலும் மாற்ற முடியாது. அதிமுகவில் நடக்கும் ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தவே இந்த கூட்டம்.

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பார்க்கட்டும். அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. எம்ஜிஆரை நேரில் பார்த்து ஈபிஎஸ் பேசியது உண்டா? பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விடாமல்  தடுக்க சதி நடந்தது. பொதுக்குழுவில் என்னை கண்டுகொள்ளாமல் ஈபிஎஸ் சென்றார்.

அதிமுக வங்கி கணக்கில் ரூ.256 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. டெபாசிட் பணத்தில் இருந்து வரும் வட்டியில்தான் கட்சி நடக்கிறது. கட்சி நிதியை முறையாக பயன்படுத்தாவிட்டால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்சி நிதியில் இருந்து ரூ.2 கோடியை என்னிடம் கேட்டு பெற்று திரும்பி கொடுத்தார் ஜெயலலிதா. தினகரன் கட்சியை உடைத்தபோது ஆட்சியை நான்தான் காப்பாற்றினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story