அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் : ஆளுநர் மாளிகையில், நாளை பதவியேற்பு விழா

தி.மு.க. இளைஞரணி செயலாளராக 2-வது முறையாக உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். அப்போதே விரைவில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவார் என தகவல்கள் வெளியானது. உதயநிதி அமைச்சராகும் அதே நாளில் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்காக கோட்டையில் தனி அறை ஒன்று தயாராகி வருவதாகவும், இன்று இரவுக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.