நாம், நல்லவர்களாக இருந்தது போதும்; இனி வல்லவர்களாக மாற வேண்டும் : பிரேமலதா பேச்சு 

By 
dmdk

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையில் தே.மு.தி.க. குடும்ப விழாவும், நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா பங்கேற்று பேசியதாவது:-

இயற்கை எழில் சூழ்ந்த குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதியாக புதுக்கடை பகுதி விளங்குகிறது. குமரி மாவட்டம் தாய்த்தமிழகத்தோடு இணைவதற்கு முக்கிய களமாற்றிய பகுதியாக புதுக்கடை உள்ளது.

இந்த புதுக்கடையில் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நீங்கள் அனைவரும் கேப்டன் எப்படி இருக்கிறார் என்பது கேட்பது போல் இருக்கிறது. கேப்டன் சிறப்பாக இருக்கிறார். நலமாக இருக்கிறார். இன்றைக்கு சென்னை ஏர்போர்ட்டில் வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

உண்மை தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையினுடைய இரு பக்கங்களாகும். குறுகிய காலகட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் என்று அந்தஸ்தை பெற்ற கட்சி தே.மு.தி.க. ஆகும். தற்பொழுது தொய்வை சந்தித்தாலும் மீண்டும் எழுவோம்.

புதுக்கடையில் கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. இது நேர்மையானவர்கள், அரசியல் தூய்மையானவர்கள் இருக்கக்கூடிய கட்சியினுடைய கூட்டம். பல்வேறு நிகழ்வுகளில் செல்வதற்காக வந்தபோது போலீசார் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என அனுமதி மறுத்தனர்.

எதற்கு இப்படி செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் அதை எதிர்த்து போலீசாரிடம் பேசி இந்த விழாக்களை நடத்தி உள்ளோம். 10-க்கும் மேற்பட்ட உபசரிப்பு நிகழ்வுகள் நடந்தது. நம்முடைய தொண்டர்கள் நேர்மையாகும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் நல்லவர்களாக இருந்தது போதும் இனி வல்லவர்களாக மாற வேண்டும். நல்லவர்களை எளிதில் ஏமாற்றி விடுகிறார்கள் முதுகில் குத்துவிடுகிறார்கள். இதனால் நம்மால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை.

குமரி மாவட்டத்தில் வலுமிக்க கட்சிகளாக விளங்கும் காங்கிரஸ், பாஜக கட்சிகள் குமரி மாவட்டத்தை சீரழித்து வருகிறது. பல்வேறு ஊழல்களால் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. தற்பொழுது இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக பாஜக உள்ளது.

குமரியில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Share this story