உலகின் முன், நம் கலாச்சாரத்தை பெருமிதமாய் வெளிப்படுத்த பணியாற்றுவோம் : பிரதமர் மோடி 

150a

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகரிஷி அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டு அரவிந்தருக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இத்தகைய முயற்சிகள் நாட்டிற்கு புதிய ஆற்றலையும் வலிமையையும் தரும். சில தலைசிறந்த தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, தேசத்தின் ஆன்மாவிற்கு புத்துயிரூட்டினர்.

மகரிஷி அரவிந்தர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி ஆகியோரது வாழ்வில் நிகழ்ந்த பல முக்கியமான சம்பவங்கள், மக்களின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. 

இந்தியா தனது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தால் எந்தளவுக்கு பின்னிப்பிணைந்த நாடு என்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. அத்தகையை சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

மொழி, கலாச்சாரம் ஆகிய வேறுபாடுகளைக் களைந்து இளைஞர்கள் ஒன்றிணைந்து இருப்பதை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அனைவரது கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த உலகின் முன்பு, இந்தியாவை முதலிடத்திற்கு முன்னேற்றி நம்முடைய கலாச்சாரத்தை பெருமிதத்துடன் வெளிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற நாம் அனைவரும் தயாராவோம். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளிக்காட்சி மூலமாக வெளியிட்டார்.

Share this story