பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக நிலை என்ன? : மருது அழகுராஜ் விளக்கம் 

By 
marudhu46

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக நிலைப்பாடு என்ன? என்பது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் அளித்துள்ள தெளிவுரை வருமாறு :

'அதிமுகவில் இன்று இருக்கக்கூடிய பிணக்குகள் மிகப் பிரதானமாக பேசப்படுகிறது. ஒன்றுபட்டால் தான் வென்று காட்ட முடியும் என ஓபிஎஸ் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். இதனை பாஜகவும் இந்த ஒற்றுமையை மிக விரும்புகிறது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமி மட்டும் அடம்பிடிக்கிறார். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில், அவர் யாரை நீக்கினாலும் அங்கீகாரம் எனும் பட்டியலில் தான் இருக்கிறோம். 

ஏனெனில், மடியிலே கனம் இருந்தால்தானே வழியிலே பயம் இருக்கும். 

இதில், பாஜகவை வைத்து மிரட்டுவதற்கு ஒன்றுமே இல்லை. 

இன்றைய சூழலில் வகை தொகை தெரியாமல் சம்பாதித்த பலகோடி ஊழல்கள் எல்லாம், தவறுகள் எல்லாம், எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் அச்சுறுத்தலாய் இருக்கின்றது. 

இந்நிலையில், அன்றைக்கு துணை முதலமைச்சராய் பொறுப்பு வைத்த ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுச் சொன்னார்,

'டெண்டர்களை மட்டுமே கவனிக்காதீர்கள், மக்களையும், தொண்டர்களையும் கவனியுங்கள்; அடக்கமாய் இருங்கள்; அதுதான், புரட்சித்தலைவி அம்மா வழியில் நடக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நல்லாட்சி' என எச்சரித்தார்.

என்னைப் பொறுத்தவரையில், 'இடி அமீன் எடப்பாடி இல்லாத அண்ணா திமுக வரும்'.

ஏனெனில், ஒற்றுமை என்ற வார்த்தையையே கெட்ட வார்த்தை என எடப்பாடி நினைக்கிறார். 

பொதுவாக, குடும்ப நிகழ்வுபோல்.. உட்கட்சிப் பூசல்களில் கடும் மோதல்களும், தடித்த வார்த்தைப் பிரயோகங்களும் எழுவது இயற்கை. 

இதற்கு கடந்த கால நிறைய வரலாற்று நிகழ்வுகள் உண்டு; இதில் திமுக உள்பட. இதில், பின்னர் எதிர்காலமும் வந்ததுண்டு. 

இந்நிலையிலும், புரிந்துகொள்ளாத எடப்பாடி பழனிசாமி தன்னலச் சீக்கு பிடித்து அலைகிறார். ஆனால், உடன் இருப்போர்க்கு மனசாட்சி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

ஏனெனில், அதிமுகவின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள்.

நல்ல அமைச்சருக்கும் நல்ல தலைவருக்கும் வேறுபாடு உண்டு. நல்ல முதலமைச்சராகவும் தலைவராகவும், புரட்சித்தலைவி அம்மாவால் மூன்று முறை அங்கீகரிக்கப்பட்டவர் ஓபிஎஸ் என தொண்டர்கள் சூழ்ந்து வருகிறார்கள். 

தெளிவாகச் சொன்னால், அதிமுகவை வழிநடத்தும் அனைத்து தலைமைப் பண்பும் ஓபிஎஸ் தான் என ஒவ்வொரு தொண்டரும்  முடிவெடுத்து விட்டனர். 

கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் கட்சியை கபளீகரம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் எடப்பாடி பழனிசாமி மீது எழுந்துள்ள ஒவ்வொரு தொண்டரின் நியாயமான  கேள்வியாக எழுகின்றது.

இவ்வாறு அதிமுக செய்தித் தொடர்பாளர் கவிஞர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.

Share this story