அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து, பிரதமர் மோடி எப்போது நீக்குவார்? : காங்கிரஸ் கேள்வி
 

ajay

லக்கிம்பூர் கேரி வன்முறையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த 2ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. 

ஆனால், இந்த ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இன்னும் எத்தனை காலம்? :

இந்த தீர்ப்பையடுத்து, மத்திய அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதுடன், மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவை பிரதமர் எப்போது நீக்குவார்? என கேள்வி எழுப்பி உள்ளது.
 
“அஜய் மிஸ்ராவை மோடி எப்போது தனது அமைச்சரவையில் இருந்து நீக்குவார்? விவசாயிகளுக்கு துரோகம் செய்வதையும், கொலையாளியை வலுப்படுத்துவதையும் பாஜக எப்போது நிறுத்தும்? 

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் மோடி அரசு விவசாயிகளை ஒடுக்கும்?” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி :

லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார். 

எவ்வளவு காலம் போராடினாலும் சரி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க, இறுதிவரை துணை நிற்பது நம் அனைவரின் பொறுப்பு என்றும் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Share this story