ஈரோடு தொகுதியில், கமல்ஹாசன் ஆதரவு யாருக்கு தெரியுமா?

By 
kamal8

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

இது பற்றி ஆலோசித்து முடிவெடுக்க சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நாளை (23-ந்தேதி) காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் யாத்திரையில் டெல்லி சென்று பங்கேற்ற கமல்ஹாசன், தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி தனியாகவும் விவாதித்தார்.

இதன்மூலம் நான் எந்த பக்கம் இருக்கிறேன் என்பதை கமல்ஹாசன் 100 சதவீதம் உறுதிப்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி இதுதொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் சுமார் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இதன்மூலம் நாங்கள் பிரித்த ஓட்டுகளே பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான த.மா.கா. யுவராஜாவின் தோல்விக்கு காரணமாக அமைந்திருந்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி விவாதிப்பதற்காக ஈரோடு மாவட்ட நிர்வாகிகளையும் கமல்ஹாசன் சென்னைக்கு அழைத்துள்ளார். அவர்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

Share this story