மெகா கூட்டணியில் அமமுக சேருமா? : டிடிவி.தினகரன் பதில்
 

By 
ttv5

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன்.

எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும். அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை. நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம்.

எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story