அரசியல் சதுரங்கம் - 21-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தால் மாற்றம் வருமா? : ஓபிஎஸ் பதில்..

21th

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில், சட்ட போராட்டத்தையும் நடத்தி தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோரையும் ஓ.பி.எஸ். நியமித்துள்ளார். 88 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றே ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இன்னொரு தீர்ப்பும் வெளியானது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.எஸ். தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. வருகிற 4-ந்தேதி விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியுள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் முன்னிலை நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 4-ந்தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஓ.பி.எஸ். கூட்டியுள்ள இந்த திடீர் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனைகளை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்பு தெரிவித்து பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா முதல்-மந்திரி பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பி இருக்கும் நிலையில்தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஓ.பி.எஸ். ஏற்பாடு செய்துள்ளார். இதுவும் அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதனால் 21-ந்தேதி ஓ.பி.எஸ். கூட்டியுள்ள நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக விமான நிலையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று வந்தார். அப்போது ஓ.பி.எஸ்.யிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறீர்களே, இதன் மூலம் ஏதும் மாற்றம் வருமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கூட்டம் முடிந்த பிறகுதான் மாற்றம் இருக்குமா? என்பது தெரியும். இப்போது சொல்ல இயலாது என்று ஓ.பி.எஸ். தெரிவித்து விட்டு கடந்து சென்றார்.

 

Share this story