நேற்று இன்று நாளை : ஆளும் கட்சிக்கு, ஓபிஎஸ் தரப்பு அறிவுறுத்தல்

marudhu86

'இந்த ஆட்சியில் எங்காவது துப்பாக்கி சூடு நடந்ததா? பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் ஏதாவது நடந்ததா? கொடநாடு, கொலை, கொள்ளை யாரது ஆட்சியில் நடந்தது? நாங்கள் எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கிறோம். மதவாத, தீவிரவாத சக்திகளை வளர விடமாட்டோம்' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இது தொடர்பாக... அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

மின் கட்டண உயர்வை எதிர்த்து போராடிய பெருமாநல்லூர் விவசாயிகளை குருவிகளை சுடுவதுபோல சுட்டு வீழ்த்தி விட்டு, துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வராமல் பூக்களா வரும் என்று எகத்தாளம் பேசியது யாருடைய ஆட்சி.?

சொற்ப கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பதினேழு பேரை தாமிரபரணி நதிக்குள் தள்ளி, ஜீவசமாதி செய்து சாகடித்த சண்டாளர்களின் ஆட்சி யாருடைய ஆட்சி.?

கொங்கு தமிழ் பேசுகிற கோவை பூமியில், தொடர் குண்டு வெடிப்புகள் நடக்கவிட்டு ராணுவம் வந்து கலவரம் அடக்க வேண்டிய நிலைக்கு அமைதித் தமிழ் மண்ணை அமளிக் காடாக்கியது யாருடைய ஆட்சி.?

சட்டக் கல்லூரி வளாகத்துள் மாணவர்கள் மோதிக்கொண்டு ரத்தச் கதியில் வீழ்ந்ததும்..

சென்னை உயர்நீதிமன்றத்துக்குள் காவல்துறையும் நீதித்துறையும் மோதிக்கொண்டு, நீதியரசர் ஒருவரது மண்டை பிளக்கப்பட்ட மகா கேவலங்கள் நிகழ்ந்ததும் யாருடைய ஆட்சியில்.?

இப்படி, தி.மு.க. ஆட்சிக்கால சட்டம் ஒழுங்கு சீரழிவுகளை பட்டியலிட்டால், அது பக்ககங்களுக்குள் அடங்காதே.. 

எனவே, இன்றைய தவறுகளுக்கு நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக் காட்டிவிட்டு தப்பிக்க பார்ப்பதும், எதிர்லாவணி பாடி இயலாமையை பூசி மெழுகுவதும் ஆட்சி நடத்துபவர்களுக்கு அழகல்ல..

இனி வரும் நாட்களிலாவது, சட்டம் ஒழுங்கை சீர்படுத்தி அன்னைத் தமிழ் மண்ணை அமைதிப்பூங்காவாக மாற்றுவோம் என்னும் உறுதியை மேற்கொள்வதுதான் ஆளும் கட்சிக்கு நலம் பயக்கும்.

இதற்கு மாறாக, நேற்றை.. இன்றைக்கு சாட்சியாக்குவதால் நாளைக்கு நற்பயன் விளையாது. இதனை விடியல் கம்பெனி விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story