செயற்குழுக் கூட்டமா.. செம்மறி ஆட்டுக்கூட்டமா? உறுப்பினர் அட்டையா.. கொள்ளிக்கட்டையா? : ஓபிஎஸ் தரப்பு விளாசல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் விடுத்துள்ள கேள்விச்செய்திகள் வருமாறு :
* முதல்வர் பதவியை, கூவத்தூரில் தங்க பார் கொடுத்து குத்தகை எடுத்த எடப்பாடி.. இப்ப தமிழ் மகன் உசேனுக்கு கார் கொடுத்து இருக்கிறார் என்றால்...
ஆக, எடப்பாடியின் கொள்முதல் அரசியல் எம். ஜி. ஆரின் கட்சியை ஒரு ஏலக்கடையாக மாற்றியிருக்கிறது. இப்போது கூட, எடப்பாடி கம்பெனி நடத்தியது செயற்குழு கூட்டம் அல்ல, அது செம்மறி ஆட்டுக் கூட்டம் தான்.
இந்த அத்தனை கொடுமைக்கும் தொண்டர்கள் கூடி நீதி கேட்கும் நிகழ்வாக திருச்சி முப்பெரும் விழா மாநாடு அமையும்.
* எடப்பாடி, தனது பணப் பண்ணையில் தீனி போட்டு வளர்க்கும் 2500 பேர் தான் கட்சி என்றால்.. பிறகு எதற்கு எடப்பாடியின் மூஞ்சி போட்ட புதிய உறுப்பினர் அட்டை..
அது உறுப்பினர் அட்டை அல்ல.. அது அண்ணா தி.மு.க.வின் அழிவுக்கு எடப்பாடி எடுத்து நீட்டும் கொள்ளிக் கட்டை என்பதே உண்மை.
அந்த உறுப்பினர் அட்டையை கழகத் தொண்டர்களால் மிடுக்கோடு தங்கள் சட்டைப்பையில் வைத்துக் கொள்ள முடியாது. அதனை, யார் வைத்திருந்தாலும் அதனை துரோகத்தின் அடையாள அட்டையாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
எனவே, அதனை இனாமாக கொடுத்தாலும் உப்புப் போட்டு சாப்பிடும் எவருக்கும் அதனை கையால் தொடுவதற்கே மனம் கூசும் என்பதே சத்தியம்.
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.