பிரதமரைப் பற்றி ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி அலுவலகத்தில், அதிரடி ரெய்டு..

இந்தியா மோடி மீதான கேள்வி' என்ற பி.பி.சி. ஆவணப்படம் அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. குஜராத் கலவரம், சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டுள்ள இந்த ஆவண வீடியோ மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த ஆவணப்படத்தின் யூ டியூப் வீடியோ மற்றும் அதன் இணைப்புகளை கொண்ட டுவிட்டர் பகுதிகளை மத்திய அரசு முடக்கி இருந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
பி.பி.சி. ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த டிஜிட்டல் ஆவணங்களையும் அவர்கள் ஆய்வு செய்து சேகரித்ததாகவும் தெரிகிறது.