நடிகர் விஜய் அதிரடி அரசியல் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு..

By 
tvk5

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை ஓடைப்பட்டியில் 550 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்  கல்லணை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு காசோலை, ஊர் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், " மாநாட்டிற்கு இடம் தேர்வு செய்யும் பணி என்பது நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நான் முக்கிய பொறுப்பில் இருந்தாலும் எங்களுடைய முகவரி தளபதி தான். அரசியல் தொடர்பான கருத்துக்களை அவர் தான் தெரிவிப்பார். தளபதியின் ஆலோசனை இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது செய்யவும் மாட்டோம். தளபதி மிக விரைவில் மக்களை நேரடியாக சந்திக்க உள்ளார்"என்றார்.

இதனிடையே கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து நடிகர் விஜய் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளார். அதன்படி, வருகின்ற 28ம் தேதியும், அடுத்த மாதம் 3-ம் தேதியும் என இரு கட்டங்களாக இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share this story