அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது : எடப்பாடி பழனிசாமி ஆவேசம் 

By 
epse

வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள், மீன் பாடி வண்டிகள், காய்கறி வியாபாரம் செய்யும் வண்டிகள், இட்லி வியாபாரம் செய்யும் பாத்திரங்கள், மீன் வியாபாரம் செய்யும் அன்ன கூடைகள், அயன் பாக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு அரிசி பைகள் என 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு, இரண்டாக உடைந்த அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்தவர் அம்மா. பீனிக்ஸ் பறவைபோல எழுந்து வந்து 15 ஆண்டு காலம் ஆட்சியமைத்தார். புரட்சித்தலைவரும் புரட்சித் தலைவியும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்.

அவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. சாதாரண கிளை செயலாளர் முதல்வராக முடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் தான். தி.மு.க.வில் அது நடக்காது. குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அ.தி.மு.க., ஒரு ஜனநாயக கட்சி.

இரண்டு தலைவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சியை முடக்க எத்தனையோ அவதாரம் எடுத்தனர். ஆனால், கட்சியை மீட்டு காட்டியிருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் துன்பமும், வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும் இவர்களால் கொடுக்க முடியவில்லை. 520 அறிவிப்புகளில் எந்த ஒரு முக்கிய திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Share this story