48 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழ்த்தப்பட்ட சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By 
After 48 years, the feat performed Chief Stalin's pride

தஞ்சையில், இன்று அரசு சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது :

புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலையை, கோவிலுக்கு வெளியே பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு, நிறுவியர் கருணாநிதி தான். 

கருணாநிதியை போராட்ட வீரராக மாற்றிப் பெரிய தலைவராக உருவாக்கியதில் தஞ்சைக்குப் பெரும் பங்கு உண்டு.

தற்போது, தமிழகத்தில் கொரோனா மெல்ல தலைதூக்க தொடங்கியுள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தாலும், தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. 

இருப்பினும் விழாவை தள்ளி வைக்கலாமா? என்று அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு அவர்கள் பாதுகாப்புடன் விழா நடத்தலாம் என்று கூறினார்கள். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே, இந்த விழா நடத்த அனுமதி கொடுத்தேன். 

இருந்தாலும், இன்றைய தினம் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மட்டும் நலத்திட்ட உதவி வழங்கப்படும். மீதி உள்ள பயனாளிகளுக்கு இன்னும் 3 நாட்களில் மாவட்ட கலெக்டர் தலைமையில், வீடு தேடி உதவி வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில், வழக்கமாக குறுவை சாகுபடி 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர் என்ற அளவிலே இருந்தது. ஆனால், தற்போது இலக்கை தாண்டி 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

இது 48 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை. இந்த மாபெரும் சாதனைக்கு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு முன்னர், தூர்வாருதல் நடந்தது. 

மானிய விலையில் உரங்கள், விதை நெல்கள் வழங்கப்பட்டன. தற்போது சம்பா, தாளடி சாகுபடியும் இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. 

தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், இந்த 6 மாத காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம்.

காவிரியில் தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இடைக்கால தீர்ப்பு மூலம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பெற்று தந்தார். 

மேலும் தமிழகத்திற்கு சரியாக தண்ணீர் வருகிறதா என கண்காணிக்க ஒரு கண்காணிப்பு ஆணையத்தையும் அமைக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி. காவிரி உரிமையை பாதுகாத்த இயக்கம் தி.மு.க. தான்.

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டுவதே லட்சியம். அதனை இலக்காக கொண்டு பயணித்து வருகிறோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

தற்போது, இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் 6 மாதத்தில் பெரிய வெற்றியை தமிழக அரசு பெற்றுள்ளது. வேளாண் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

நுகர்பொருள் வாணிப கழக நெல்கொள்முதலில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். 

அதன்படி, கோரிக்கையை ஏற்று ரூ.5255 ஆக ஊதிய உயர்வு வழங்கப்படும். உதவியாளர்களுக்கு ரூ.5218 வழங்கப்படும். இதில், அகவிலைப்படி ரூ.499 சேர்த்து இது வழங்கப்படும்.

இதேபோல், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும் மூட்டை ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்கப்படும்' என்றார்.
*

Share this story