அதிமுக - பாஜக திடீர் மோதல்; எடப்பாடி பழனிசாமி கொடும்பாவி எரிப்பு; கூட்டணியில் விரிசல்?

தமிழகத்தின் பல இடங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். இதனால் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகளை அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் தமிழகத்தில் வலுவான கட்சியாகும். தற்போது எதிர்க்கட்சி வரிசையிலும் அந்த இயக்கம் அமர்ந்துள்ளது. நாளை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்கும் தகுதியான இயக்கமாகவும் அ.தி.மு.க. உள்ளது. இதுதெரியாமல் பேசுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வு மான கடம்பூர் ராஜூ அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
பா.ஜ.க. ஐ.டி. விங் நிர்வாகி அ.தி.மு.க.வில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது. ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று. அ.தி.மு.க.வில் இருந்து பலரும் பா.ஜ.க.விற்கு சென்று உள்ளனர்.
அ.தி.மு.க.விற்கு பதில் தி.மு.க.வில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள். கோவில்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி. இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.
அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை. எங்களுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர். 1996-ம் ஆண்டு பா.ஜ.க. அரசு மத்தியில் அமைவதற்கு அ.தி.மு.க. தான் உறுதுணையாக இருந்தது. அ.தி.மு.க.வை முந்த எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது. இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்ட இந்த திடீர் மோதல் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராயப்பேட்டையில் தனியார் அரங்கில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்றார். பின்னர் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் சென்றார். அங்கு கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் எம்.பி. உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது பற்றியும், அ.தி.மு.க.வில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.